தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்இன்று (6.9.2022) வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்,4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள்ஆகியவற்றை திறந்து வைத்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம்–காட்டாங்குளத்தூர், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர்மற்றும் ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்டம் –அகஸ்தீஸ்வரம், திருப்பத்தூர் மாவட்டம் – ஆலங்காயம், இராமநாதபுரம் மாவட்டம் – உச்சிப்புளி மற்றும்முதுகுளத்தூர், சேலம் மாவட்டம் – கொங்கனாபுரம், மயிலாடுதுறை மாவட்டம்– குத்தாலம் வட்டாரம், நாகமங்கலம் ஆகிய இடங்களில் 22.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்தவேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் கடலூரில் மண் ஆய்வுக்கூடம், மதுரை மற்றும் பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம் என 3 கோடி ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள
4 ஆய்வுக்கூடங்கள்;
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பால்பண்ணைச்சேரியில் 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம்;
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 28 கோடியே 75 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம்,எட்டிவயலில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம், திருப்பூர் மாவட்டத்தில் மேம்படுத்தி தரம் உயர்த்தப்பட்ட குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தென்காசி மாவட்டம், பாவூர் சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, மதுரை மாவட்டம், கோ-புதூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக சந்தை மையம்;
வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்களுக்கு வேளாண்மை பொறியியலில் நவீன தொழில்நுட்ப திறன் சார்ந்த பயிற்சி அளிக்கவும், விவசாயிகளுக்கு வேளாண்மையில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கவும் திருச்சிராப்பள்ளியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம்;
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி மாவட்டம் – பெரியகுளம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் – குடுமியான் மலை, திருவண்ணாமலை மாவட்டம் – வாழவச்சனூர், தஞ்சாவூர் மாவட்டம் – ஈச்சங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் – கிள்ளிக்குளம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டம் – மதுரை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், கன்னியாகுமரி மாவட்டம் – பேச்சிப்பாறை, தோட்டக்கலை கல்வி மையம் /தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் 54கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் வசதி மையத்துடன் கூடிய பல்நோக்கு அரங்கம், உடற்பயிற்சி கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், நூலகம், உலாவல் மையம் (Browsing Centre),ஒலி ஒளி ஆய்வகம், மாணவர் படிப்பு மையம்;
தூத்துக்குடி மாவட்டம் – கிள்ளிக்குளம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக நாளொன்றுக்கு 12.23 மில்லியன் லிட்டர், அதாவது வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் என்ற அளவில் 5.1 கி.மீ. தொலைவிலிருந்து நீரைக் கொண்டு வந்து கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரிக்கு உட்பட்ட இடத்தில் 8 நீர்த்தேக்கத் தொட்டிகளில் சுமார் 14 இலட்சம் லிட்டர் நீரை சேமித்து 700 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம்;
என மொத்தம் 125 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை –உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப.,வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் திரு.இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.