சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  கட்டுரைப் போட்டிகள் (ஆங்கிலம்/தமிழ்), பேச்சுப்போட்டி (தமிழ்), சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர்   பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை எழுதுதல், ரங்கோலி மற்றும் வினாடி வினாப் போட்டிகளும் நடத்தப்பட்டன, இதில் அலுவலர்கள் / பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சென்னை துறைமுக ஆணையம்   “ஒழுங்கு நடவடிக்கைகள்” குறித்த பயிலரங்கை சென்ற மாதம் 27.10.2022 அன்று நடத்தியது.  ஐதராபாத்  பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அலுவலர் திரு உபேந்திர வென்னம் இதில் உரையாற்றினார்.

இளைஞர்களிடையே  விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கில், 28.10.2022 அன்று காமராஜர் துறைமுகம் அருகே உள்ள மீஞ்சூரில் “வாக்கத்தான்” நடத்தப்பட்டது.  மீஞ்சூர் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இதில்  ஆர்வத்துடன் பங்கேற்றனர். 31.10.2022 அன்று  பணியாளர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம்  ஆகியவற்றில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு வார விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழா 05.11.2022 அன்று நடைபெற்றது. தமிழக வணிகவரித்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் திரு. தீரஜ் குமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் திரு சுனில் பாலிவால், சென்னை துறைமுகத் துணைத்தலைவர் திரு எஸ்.பாலாஜி அருண்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  சென்னை துறைமுக அதிகாரசபையின் ஊழல் தடுப்புத் துறையின் “விழிப்புணர்வு குரல்” என்ற கையேடு  தலைமை விருந்தினரால் வெளியிடப்பட்டது. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.