மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்” என்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
ஒன்றிய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் 4.11.2022 முதல் 6.11.2022 வரை நடைபெற்ற 15வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் எக்ஸ்போ 2022-ல், மாண்புமிகு கேரளா மாநில ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான் மற்றும் மாண்புமிகு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற துறை இணை அமைச்சர் திரு.கௌசல் கிஷோர் ஆகியோர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “சென்னை பஸ் ஆப் (Chennai Bus App)” என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்”
என்ற விருதினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., ஆகியோரிடம் வழங்கினார்கள். மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. அ. அன்பு ஆபிரகாம் அவர்கள் உடனிருந்தார்.
தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட இவ்விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. அ. அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.