பெருகி விரியும் இணைய வெளியைப்போல, இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணையவழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், போதிய விழிப்புணர்வும் இல்லாததால், அவர்கள் விரிக்கும் குற்ற வலைபின்னல்களில் மக்கள் மாட்டிக் கொண்டு தங்களது பணத்தை இழக்கின்றனர். ஆகவே, பொதுமக்களை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றவும், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெறவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தற்போதைய நடைமுறையில் உள்ள 30 சைபர் குற்ற செயல்முறைகள் குறித்து எளிதில் புரியும்படியான விளக்கப்படங்களுடன் கூடிய “முத்துவும் முப்பது திருடர்களும்”என்ற பெயரில் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை இன்று (08.11.2022) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் வெளியிட்டார்.
இந்த சைபர் விழிப்புணர்வு புத்தகத்தை QR Code மூலமாகவும், இணையவழி Link மூலமாகவும். கணினி, செல்போன் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து படித்து, பொதுமக்கள் சைபர் குற்றங்களிலிருந்து தங்களையும், தங்களது பணத்தையும் பாதுகாத்து கொள்ள இப்புத்தகம் பேருதவியாக இருக்கும்.
பல்வேறு நன்மைகள் பயக்கும், இணையவழி பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது, ஆனால் பொதுமக்கள் நினைத்தால், சைபர் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இயலும்.
எனவே, முத்துவும் முப்பது திருடர்களும் என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை பொதுமக்கள் அனைவரும் படித்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இப்புத்தகத்தை தயாரித்த கூடுதல் துணை ஆணையாளர் திருமதி.ஷாஜிதா அவர்களை பாராட்டினார்.
சைபர் கிரைம்
1.இணையத்தில் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8.12 லட்சம் மோசடி செய்த, வெளிமாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை ஜார்கண்ட் மாநிலம் சென்று கைது செய்த சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் தனது மகளுக்கு கூரியர் அனுப்ப இணையதளத்தில் தேடி ஒரு கூரியர் நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் மேற்படி கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி, 2 இணையதள லிங்க்கு களை அனுப்பி அவரின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.8.12 லட்சம் மோசடி செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்ததின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர், திருமதி.ச.மகேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் திருமதி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர்திருமதி.K.கிருத்திகா அவர்கள் நேரடி மேற்பார்வையில், சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.கலையரசன் தலைமையில் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் புகார்தாரரின் பணத்தை மோசடி செய்த எதிரிகளின் செல்போன் எண், வங்கி விவரங்களை ஆய்வு செய்தபோது, எதிரிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து மோசடி செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாரா சென்று தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி பண மோசடியில் ஈடுபட்ட எதிரிகள் 1.ஷம்ஷாத் அன்சாரி, வ/36, 2.இக்பால் அன்சாரி, வ/26, 3.ஷக்பாஸ் அன்சாரி ஆகிய 3 நபர்களை 19.10.2022 அன்று கைது செய்தனர். பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகளின்படி குற்றவாளிகளை சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
சைபர் குற்ற தலைநகரமான ஜம்தாராவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளை ஜம்தாராவிலேயே வைத்து கைது செய்தது தமிழக காவல்துறையில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு KYC Update Scam மோசடியில் ஈடுபட்ட ஜம்தாராவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் பிஷ்வந்த் மண்டல் மற்றும் பபி மண்டல் ஆகியோரை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கு வங்காளத்திற்கு சென்று சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல்துறையில், நடப்பு 2022ம் ஆண்டில் 10 வெளிமாநிலங்களைச் சேர்ந்த 28 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, சுமார் ரூபாய். 3 கோடி மீட்கப்பட்டு, சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்ட புகார்தாரர்களின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை பெருநகர காவல் சைபர்கிரைம் பிரிவு, இணையதளம் மூலம் பண மோசடி செய்யும் மற்றும் லோன் ஆப் போன்ற ஒருங்கிணைந்த பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளை தீவிர புலன் விசாரணை மூலம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
மேலும், சைபர் குற்றங்கள் குறித்தும், வங்கி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் போன்று பொதுமக்களிடம் பேசி வங்கி விவரங்களை பெற்று பணத்தை அபகரிக்கும் செயல்கள் குறித்தும், குறுந்தகவலில் இணையதள லிங்க் அனுப்பி அதன் மூலம் சைபர் குற்றங்கள் நிகழ்வது குறித்தும், சென்னை பெருநகர காவல்துறை, சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
2. பெண்ணின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்தனர்.
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில், தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் இருந்ததாகவும், தனது தொலைபேசி எண்ணிற்கு Whatsapp மூலம் ஒரு மெசேஜ் வந்ததாகவும், அதில் UK Based Project Required Indian Models- Contact: Executive Manager- Diksha Jothi என்று வந்ததாகவும், அவரை தொடர்பு கொண்ட போது அவர் புகார்தாரரின் கவர்ச்சிகரமான படங்களை அனுப்பும்படி கூறியதாகவும் அவ்வாறு அனுப்பிய புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியும் தன் நண்பர்களுக்கு அனுப்பிய அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகார் மனுவினை பெற்று மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் கிடைத்த ஒரே தகவல் Whats app எண் மட்டுமே, மத்தியகுற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் அந்த தகவலை மட்டுமே வைத்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து தீவிர கள ஆய்வு மேற்கொண்டு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் வ/26, என்ற குற்றவாளியை கைது செய்து தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
வங்கி மோசடி புலனாய்வு (Bank Fraud Investigation)
3. ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது போன்று போலி சான்றிதழ் தயாரித்து, 9 நகரங்களில் போலியாக வங்கியை துவக்கி மோசடி செய்த நபர் கைது. போலி ஆவணங்கள், வங்கி படிவங்கள், கணக்கு புத்தகம் மற்றும் பென்ஸ் கார் பறிமுதல்
பாரத ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரில், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் போலியான வங்கி இயங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இப்புகார் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் (Bank Fraud Investigation) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, அம்பத்தூர், லேடான் தெரு, VGN Brent Park என்ற இடத்தில் இயங்கி வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கிக்கு [Rural and Agriculture Farmer’s Co-operative Bank (RAFC Bank)] சென்று விசாரணை செய்ததில், பாரத ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து, சென்னை உள்பட 9 நகரங்களில் இவ்வங்கியின் கிளைகளை துவக்கி, தலா ரூ.2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் பெற்று தகுதிக்கேற்ப வங்கி அலுவலைர்களை நியமித்தும், போலியான கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்தும், பொதுமக்களிடமிருந்துவைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும் அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி போலியான வங்கியை துவக்கிய இதன் தலைவர் சந்திரபோஸ் என்பவரை 05.11.2022 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் உட்பட பொருட்கள் மற்றும் 1 பென்ஸ் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி வங்கியின் இருப்பில் இருந்த ரூ.56,65,336/- முடக்கப்பட்டது.
4.மைசூர் ஸ்டேட் வங்கியில் வீட்டு கடன் பெற்று 12 வருடங்கள் தலைமறைவாக இருந்த எதிரி மும்பையில் கைது.
புனித் சேத்தியா மற்றும் அவரது அண்ணன் பிரவீன் சேத்தியா ஆகியோர் 2004ம் ஆண்டு குரு பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடமிருந்து, கோயம்பேடு, ஐயப்பா நகரிலுள்ள 1,116 சதுரடி கொண்ட வீட்டினை வாங்குவது போல போலியான ஆவணங்களை மைசூர் ஸ்டேட் வங்கியில் சமர்ப்பித்து, 29.07.2004 அன்று ரூ.14.5 லட்சம் கடன் பெற்று, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் போலியாக நடப்பு கணக்கு துவக்கி, அதில் மேற்படி கடன் பணத்தை பெற்று தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக, 2010ம் ஆண்டு, மேற்படி மைசூர் ஸ்டேட் வங்கியின் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் (Bank Fraud Investigation) வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது, எதிரி புனித் சேத்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த முக்கிய எதிரி புனித் சேத்தியா என்பவரை 02.10.2022 அன்று கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, சென்னைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மற்றொரு எதிரி பிரவீன் சேத்தியா 2019ம் ஆண்டு இறந்தது தெரியவந்தது.
5.வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை கையாடல் செய்த வங்கி பெண் மேலாளர் மற்றும் அவரது கணவர் கைது.
சென்னை பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும்அண்ணா சாலை கிளைகளின் மேலாளராக 2016 முதல் 2019ம்ஆண்டு வரை பணிபுரிந்த அண்ணா நகரைச் சேர்ந்த நிர்மலா ராணிஎன்பவர் வங்கி வாடிக்கையாளர்கள் பலரின் நிரந்தர வைப்பு தொகைரூபாய் 1,23,00,000/- ஐ கையாடல் செய்துள்ளதாக, தற்போதைய பஞ்சாப் & சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கொடுக்க புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி வங்கியில் தொழிற்கடன் மற்றும் Letter of credit with Bank Guarantee கடன் பெறும் நிறுவனத்தினர் தாங்கள் பெறும் கடன்தொகைக்கு ஏற்ப வங்கியில் வைத்திருக்கும் நிரந்தர வைப்புதொகைகள் என மொத்தம் சுமார் ரூபாய் 1,23,00,000/-ஐ மேற்படிமேலாளர் திருமதி.நிர்மலா ராணி அபகரித்து, தனது வங்கிகணக்கிற்கு மாற்றி, அதிலிருந்து தனது கணவர் திரு.இளங்கோவன்பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து கையாடல் செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் மேற்படி மோசடியில் ஈடுபட்ட அண்ணாநகரைச் சேர்ந்த நிர்மலாராணி, பெ/வ.59 மற்றும் அவரதுகணவர் இளங்கோவன், வ/62 க/பெ.சுப்பிரமணியன் ஆகியோரை21.09.2022 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வேலைவாய்ப்பு மோசடி (Job Racket)
6.வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 36 நபர்களிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய் பெற்று போலி விசா மற்றும் பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய 1 பெண் உட்பட 3 நபர்கள் மும்பையில் கைது.
தனியார் நிறுவனத்தினர், தன்னிடமும் மற்றும் தன்னை போன்ற பல நபர்களிடமும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் பணம் பெற்று, போலி விசா மற்றும் பணி நியமன ஆணைகள் கொடுத்து ஏமாற்றியதாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் (Job racket) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், வடபழனியில் உள்ள ஆல்பா குளோபல் கனெக்ஷன் மற்றும் அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி போலியாக துவங்கப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரங்கள் கொடுத்து, சுமார் 36 படித்த இளைஞர்களிடம் தலா ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் என மொத்தம் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததும், எதிரிகள் தற்போது, மும்பையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் மும்பை சென்று எதிரிகள் 1.நிர்மலா (எ) மலர்விழி, பெ/வ.34, க/பெ.ஹரிஹரன், 7வது மாடி, சௌபாக்யா அடுக்குமாடி குடியிருப்பு, நவிமும்பை, மகாராஷ்டர மாநிலம், 2.ஹரிஹரன் (எ) வசந்த் ராஜாசிங், வ/42, த/பெ.சித்தானந்தம், மகாராஷ்டர மாநிலம் 3.ஜிதேந்தர் ராம்ஜி ஷர்மா (எ) ராஜு பாய், வ/42, த/பெ.ராம்ஜி சர்மா சுவஸ்திக், ராய்கர், மகாராஷ்டிரா ஆகியோரை 21.10.2022 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 பாஸ்போர்ட்டுகள், போலி விசா தயார் செய்வதற்கு பயன்படுத்திய 16 செல்போன்கள், 6 லேப்டாப்கள், வங்கி கணக்கு புத்தகம், 2 இலகுரக வாகனங்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் ரூ.3,65,500/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்குகளில் சிறப்பாகபணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்-1 திருமதி.G.நாகஜோதி, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் திருமதி.D.V.கிரண் சுருதி, இ.கா.ப, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் திரு.S.பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் திரு.K.முத்துகுமார், (வங்கி மோசடி புலனாய்வு பிரிவு), சைபர் கிரைம் உதவி ஆணையாளர் திருமதி.K.கிருத்திகா, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 60 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (08.11.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.ச.மகேஸ்வரி, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.