திமுக மாணவர் அணியின் தீர்மானங்கள்

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (14.11.2022திங்கட்கிழமை) மாலை 04.00 மணியளவில், மதுரை, கருப்பாயூரணி, பாண்டி கோவில் அருகில் உள்ள எம்.டி.மகாலில், கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில்,இணை – துணைச் செயலாளர்கள், பூவை சி.ஜெரால்டு, மன்னை த.சோழராஜன், எஸ்.மோகன், சேலம் ரா.தமிழரசன், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், வீ.கவிகணேசன், எம்.ஏ.எம்.ஷெரிப், அதலை பி.செந்தில்குமார், எம்.வெங்கடேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநகர, மாநில மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் – 1: கழகத்தை காக்க இரண்டாவது முறையாய் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்!

*****

             கழகப் பணியைத் தன்னுடைய 15 வயதில் தொடங்கி, நெருக்கடிக் காலக் கொடுமைகளை (மிசா) சந்தித்து, தியாகத்தால் தனது அரசியல் வாழ்வைச் செதுக்கி 50 ஆண்டுக் கால அரசியலில் தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமல், தான் கழகத் தலைவராய் பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட தேர்தல்களில் எல்லாம் இந்தியாவே அதிசயித்துப் பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டி – திராவிடத்தை காப்பாற்றி – தமிழ்நாட்டை மீட்டெடுத்து, அணுப் பொழுதும் ஓய்வின்றி- அல்லும் பகலும் மக்கள் நலன் காக்க சிறப்பான திட்டங்கள் தீட்டியும்- கழகத்தை கட்டுப்பாட்டுடனும் – கண்ணியத்துடனும் – கடமை தவறாமலும் காத்து நிற்பதுடன், தூய தொண்டர்களை மறவாமல், அவர்தம் வாழ்வின் உயர்விற்காக உழைத்து வரும் – தன்மான இயக்கத்தின் தன்னிகரில்லா தானைத்தலைவர் – கழகத்தை காக்க இரண்டாம் முறையாய் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் தமது இதயமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சி பொங்கும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.

மேலும், கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில், பொதுச் செயலாளராக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன், கழகப் பொருளாளராக நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் திருமிகு. டி.ஆர்.பாலு மற்றும் கழக தலைவரால் நியமிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர்  மாண்புமிகு கே.என். நேரு,துணைப் பொதுச் செயலாளர்களாக மாண்புமிகு .பெரியசாமி, மாண்புமிகு .பொன்முடி, திருமிகு. ஆ.ராசா, திருமிகு. அந்தியூர் செல்வராஜ், திருமிகு. கனிமொழி கருணாநிதி ஆகியோரின் பணி சிறக்க, இதயங்கனிந்த வாழ்த்துகளை தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் – 2: இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில்,

மக்கள் சேவை புரிந்து “எளியோர் எழுச்சி நாளாக” கொண்டாடுவீர்!

*****
 கழக இளைஞர் அணியின் செயலாளர்-இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்கள் பணியில் முன்களப்பணியாளராகவும், கழகப் பணியில் முதன்மை தொண்டனாகவும், ஏழை-எளியோர்களின் துயர் துடைப்பதில் முதன்மையானவராக செயல்பட்டு கொண்டிருப்பது நாடறிந்த உண்மையாகும்.  இளந்தலைவர் அவர்களின் மக்கள் பணி, கழகத்தினரை கடந்து, படித்தோர்-பாமரர், ஆண்கள்-பெண்கள், இளையோர்-முதியோர் மற்றும் எளிய மக்கள் அனைவரும் போற்றுகின்ற வகையில் உள்ளது.  எளியோர் வாழ்வில் எழுச்சி காண வேண்டும் என செயல்படுகின்ற உன்னத இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை “எளியோர் எழுச்சி நாள்” என்று கொண்டாட வேண்டுமென சென்ற ஆண்டு கழக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றி, சிறப்பாக கொண்டாடியதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் நவம்பர் 27 அன்று, கழக மாணவர் அணி சார்பில் கழக இரு வண்ண கோடியேற்றி, எளியோர்களுக்குப் பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு,புத்தகங்கள், கல்வித் தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவி செய்தல், விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்த தான முகாம்களை நடத்துதல், மரக்கன்றுகளை நடுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல் முதியோர் இல்லம் – கருணை இல்லம் – பார்வையற்றோர் பள்ளி – மாற்றுத் திறனாளிகள் தங்கும் இல்லம், மனநலம் குன்றியோர் தங்கும் விடுதி, தொழு நோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களுக்கு அறுசுவை உணவு வழங்குவது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட உதவிகளை கழக மாணவர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடத்திட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

 தீர்மானம் – 3: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி, ஆதிக்க இந்தியை எதிர்த்து இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து போராட்டக் களம் காணும் வாய்ப்பினை வழங்கிய கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிஅவர்களுக்கு நன்றி!

*****
பாசிச பா.ஜ.க. அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளித்துள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று வழங்கியுள்ள பரிந்துரைகளை திரும்பப் பெற ஒன்றிய அரசினை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில், அதனை பாதுகாத்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதற்கு கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கழக மாணவர் அணியின் இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.  இந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படவேண்டுமென்று கழகத் தலைவர் அவர்கள் ஆணையிட்டதன் பேரில், அன்னைத் தமிழ் மொழி காக்கும் உன்னத போராட்டத்தில், இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து போர்களம் காணுகின்ற வாய்ப்பை வழங்கிட்ட கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது செம்மார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள பரிந்துரைகளை திரும்பப் பெறாவிட்டால், கழகத் தலைவரின் ஆணையைப் பெற்று, டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் தலைநகரில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று போர்முரசு எழுப்பியுள்ள கழக இளைஞர் அணிச் செயலாளர் – இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை, தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் மனதார பாராட்டி, அவர் விடுத்திருக்கக்கூடிய அறைகூவலுக்கு தி.மு.க. மாணவர் அணி  என்றென்றும் துணை நிற்கும் என்று சூளுரை மேற்கொள்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் பெருவெற்றியடைய காரணமாய் இருந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், இளைஞர் அணி-மாணவர் அணியினருக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 4: தென் மாநிலங்களில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த, கழக இளைஞர் அணிச் செயலாளர் தலைமையில் “இந்தி திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்” நடத்துவது!

*****
இந்தியா முழுவதும் இந்தி ஒன்றே ஒரே மொழி என்ற ஆதிக்க தன்மையோடு, அனைத்து மொழிகளின் உரிமைகளையும், மாநில உரிமைகளும் பாதிக்கின்ற வகையில் இந்தியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் எதேச்சதிகார போக்கினை எதிர்க்கும் வகையிலும், அவரவர் தாய்மொழியின் அவசியத்தை உணரச் செய்யும் வகையில் இந்தியாவின் தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கழக இளைஞர் அணிச் செயலாளர்-இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், அம்மாநிலங்களில் உள்ள இந்தி திணிப்புக்கு எதிரான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும்“இந்தி திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்” நடத்துவதென தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

 தீர்மானம் – 5: தமிழ்நாடு அரசு இந்தி திணிப்பிற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை மாணவர்களிடையே பரப்புரை செய்தல் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிஅவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாசிச ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், பரப்புரை செய்தல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கழக மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொள்ளும் வகையில் கருத்தரங்குகள் நடத்துவதென தி.மு.க. மாணவர் அணி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் – 6:பெண்ணுரிமை காக்கும் “புதுமைப் பெண் திட்டம்” எனும் புரட்சிகர திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி!

*****

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில், கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் தமிழ்நாட்டின் பெண் மாணவியர்களுக்கு, தந்தையின் பேரன்போடு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை மாற்றியமைத்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பெயரிலான திட்டத்தை வெறும் திட்டமாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான விதையாக புதுமைப் பெண் என்ற புரட்சிகர திட்டத்தை இந்திய ஒன்றியம் மட்டுமல்ல; உலகமே வியந்து பார்க்கும் வகையில் செயல்படுத்தி, திருமண தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கு கல்வி என்னும் நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்று “பெண்ணுரிமை” காக்கும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

 தீர்மானம் – 7: “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” மூலம் தொடக்கப்பள்ளி மாணவச் செல்வங்களின் பசியாற்றிய தாயுள்ளம் கொண்ட கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி!

*****
 1922-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு, நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்ட மதிய உணவு திட்டமானது, தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் உண்மையான சத்துணவு வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில், வாரத்தின் ஐந்து நாட்களும் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் நமது கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், தொடக்கப்பள்ளி மாணவச் செல்வங்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை” தொடங்கியுள்ளார்.  இத்திட்டத்தினை தொடங்கிய தாயுள்ளம் கொண்ட கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது செம்மார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

 தீர்மானம் – 8:  “நான் முதல்வன்” திட்டம் மூலம் மாணவ-மாணவியரின் தனித் திறமைகளை மேம்படுத்திடவும், முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பினை உறுதி செய்வதிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி!

*****

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்கும் வகையில், கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் “நான் முதல்வன்” திட்டம் அமைந்துள்ளது. மேலும், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு, இதுவரை 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 இலட்சத்து20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்து, சுமார் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு மூதலீடுகளை ஈர்த்துக் கொண்டே, மறுபுறம் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதற்கு, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.