25.11.2022 அன்று துபாயிலிருந்து வந்த இகே-542 விமானத்தில் சென்னைக்கு வந்த ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து 66 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. அவரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குடலுக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 5 தங்க கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 24 காரட் தங்கமான இவை அனைத்தின் மொத்த எடையும் 425 கிராம் அளவுக்கு இருந்தது. இவற்றின் மதிப்பு 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும். இந்த தங்கத்தை சுங்கச்சட்டம் 1962-ன்கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21.11.2022 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் IX-688 விமானத்தின் மூலம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின்போது அந்த நபரின் உடைமைகள் மற்றும் குடல் பகுதியில் இருந்து 12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி இருப்பது கண்டறியப்பட்டது. அதை சுங்கச்சட்டம் 1962-ன்கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.