மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் வேலூர் சார்பாக, ராணிப்பேட்டையில் உள்ள லிட்டில் ஃபிளவர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி இன்று தொடங்கியது.

வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன், வரலாற்றை தொலைத்த சமூகம் தனது வாழ்க்கையை தொலைத்த சமூகத்திற்கு ஒப்பானது. அந்த வகையில் இன்றைய தினம் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை செய்திருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியின் நோக்கமே அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும் மத்திய அரசின் மூலம் ஏழைகள் பயன்பெறும் வகையில் வீடு கட்டும் திட்டம், கிராமப்புறங்களில் சாலை வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

  நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு அண்ணாதுரை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். அதற்கு நன்றியுடன் இருக்கிறோம். அதுபோல ஒரு நாடு சுதந்திர நாடாக உருவாக பலரும் தங்களது சொத்துக்களை இழந்து, அடி உதைகளை வாங்கி, உயிரை இழந்துள்ளனர். நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தேசத் தலைவர்களை நாம் நினைத்து பார்ப்பது நமது கடமை என தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் கல்லூரிப் பருவத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஆழ்ந்த அறிவைப் பெற்று தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு நேரத்தை சரியாகப் பயன்படுத்தி செயல்பட வேண்டும் என மாணவர்களை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக காசி தமிழ் சங்கத்தின் குறும்படமும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், வேளாண்மை துறை, குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், முன்னோடி வங்கிகள் உள்ளிட்ட திட்டங்களில் மத்திய அரசின் மூலம் செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்தான  தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி சார்பில், சாலையோர  வியாபாரிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி, கள விளம்பர அலுவலர் திரு.எஸ்.முரளி, வேளாண்துறை துணை இயக்குனர் விஸ்வநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலையம்மாள் ஆபிரகாம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், கள விளம்பர உதவியாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.