சென்னை, டிசம்பர் 18, 2022 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று தெரிவித்தார். சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட ‘வைகை‘ சுங்கத்துறை மாளிகை வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தக் கட்டிடம் ஆற்றல் திறனுக்கான சான்றாக இருக்கும் என்றும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார். அதாவது மொத்தக் கட்டுமானப் பணிகளும் பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், சுற்றுசூழலை மாசுபாடுகளிடம் இருந்து தடுக்க முடியும் என்றார். இந்த ‘வைகை’யில் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சூழல் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் இந்த கட்டிடம் நிறைவடைந்து செயல்படத் தொடங்கிய பிறகு, இதனை சுங்கத் துறை தலைமையகத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் இந்தப் புதிய அலுவலகம், வரும்காலங்களில் அனைத்து சுங்கத்துறை தொடர்பான கட்டிட திட்டங்களுக்கும் முன்மாதிரியாக திகழும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். ‘வைகை‘ சுங்கத்துறை மாளிகை வளாகத்திற்கு வருபவர்களின் வர்த்தக நடவடிக்கை தொடர்பான அனைத்தும் சிறப்பான முறையில் அமையும் என்றார்.
இந்த பூமி பூஜை நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நடவடிக்கையாக, இந்த பழமையான கட்டிடத்தின் கட்டிடக்கலையில் தேவையான மாற்றங்களைச் செய்து, பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பணியாற்றும் அதிகாரிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணியையும் சுங்கத்துறை மேற்கொண்டுள்ளது என்றார்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் தலைவர் விவேக் ஜோரி, மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் நிதின் குப்தா, வருமான வரி மற்றும் சுங்கத்துறையின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.