அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023 குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக திண்டுக்கல் ஜான் பால் மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர திரு.எம்.அண்ணாதுரை ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விழா அரங்கில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் புகைப்படக் கண்காட்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்வையிட்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.
மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு. எம்.அண்ணாதுரை பேசுகையில், அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள்தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுவதாகக் கூறினார்.
இங்கு புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் நாட்டுக்காக உழைத்து சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். நமக்காக உழைத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் எனஅவர் கேட்டுக் கொண்டார். அது நம்முடைய கடமை என்று கூறிய அவர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அனைத்துப் பிரிவு மக்களுக்காகவும் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து திட்டங்கள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த புகைப்படக் கண்காட்சிநடைபெற்று வருவதாக அவர் கூறினார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்ததுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பேசுகையில்சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் புகைப்படக் கண்காட்சியினை அரசு நடத்தி வருவதாகக் கூறினார். ஆரோக்கியமாக இருக்க சிறுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். புத்தகங்களை அதிக அளவில் படிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஜி 20 குறித்த கையேட்டினையும் மாநகராட்சி மேயர் இளமதி வெளியிட்டார். மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக இரண்டு நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவிகளும் வழங்கப்பட்டது.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், மக்கள் நலத் திட்டங்களில் வங்கிகளின் பங்குகள் குறித்தும் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் அனுசியா பேசுகையில் இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டுவருவதை சுட்டிக் காட்டினார். அனைவரும் துரித உணவுகளை தவிர்த்து நம்முடைய பாரம்பரிய உணவான சிறுதானிய உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். சிறுதானியங்களில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாகவும் மாணவ மாணவிகளுக்கு அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன், சென்னை மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் முரளி, மத்திய மக்கள் தொடர்பக மதுரை கள விளம்பர உதவியாளர் போஸ்வெல் ஆசிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.