ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம்

தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கி வரும் மத்திய  ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் மற்றம் ஒலிபரப்பு, மீன்வளம். கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டல் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் அதிவிரைவு ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் வேண்டும், சென்னை – எழும்பூர் திருச்செந்தூர் ரயிலுக்கு பாபநாசத்தில் நிறுத்தம் வேண்டும், மேட்டுப்பாளையம் – கோவை இடையே மெமு ரயில் சேவை வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட வேண்டும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 2 தானியங்கி நடைபாதைகள் பொருத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள. இதற்காக நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் எழுதிய கடிதத்தில், தற்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழு ஊக்கத்தைத் தரும். இது குறித்து பயணிகள், மூத்தக் குடிமக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்தத் திட்டங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் (அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம்) என்னும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரயில் சேவைகளை மேம்படுத்தும் தங்களது நோக்கம் இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீட்டில் பிரதிபலிக்கிறது. 2023-24 ரயில்வே பட்ஜெட்டில் தமிழைகத்திற்கு 6080 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2014- 2019 காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.879 கோடியை விட ஏழு மடங்கு அதிகமாகும். இவ்வாறு ரயில் பயணிகளின் தேவைகளை அறிந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்து வரும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வரும் நாட்களில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.