இசைத் தென்றல்* மாரியப்பன் *இசைவேள்* மாரியப்பன் ஆனார்

இசைவேள் /இசைத்தென்றல் திரு மாரியப்பன் அவர்களின் 90 –ஆம் அகவை நிறைவுநாள் நிகழ்வு சிறீமகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்சிறீ ஆர்.நடராஜா அவர்கள் தலைமையில் பத்துமலைதிருத்தலத்தில் உள்ள அருள்மிகு வினாயகர் ஆலய மண்டபத்தில் 7.5.2023 ஞாயிறன்று இரவு 7.00 மணியளவில்நடைபெற்றது

இசைத் தென்றல்* மாரியப்பன்

*இசைவேள்* மாரியப்பன் ஆனார் !

நசைமிகுதி தமிழிசையில் வைத்தி ருக்கும்

       நற்பண்பும் அவரிசையில் மிஞ்சி நிற்கும் !

*இசைத்தென்றல்* மாரியப்பன் *அகவை* இந்த

       இரண்டாயி ரத்திருபத் தோடு *மூன்றும்*

இசைந்துவிட்ட *இருபத்து மூன்றாம் ஆண்டில்*

       இம்மாதம் *மே* ஏழில் *தொண்ணூ றாக*

இசைபாடி வந்திருக்கும் அந்நாள் பொன்னாள் ;

      எதற்காக ? மாரியப்பன் பிறந்த நன்னாள் !

அன்றாடம் அசைபோடும் பசுவைப் போல

      அன்றாடம் இசை,ஒன்றே அவர்தம் நாவில்

பொன்றாமல் அசைபோடும் கொள்கை யாலே

    பூத்துவிட்ட *தொண்ணூறு* வயதில் கூட

அன்றிருந்த அதேகுரலின் வளத்தில் இன்றும்

       அன்னையவள் கலைமகளின் அருளி னாலே

நன்றாகப் பாடுகின்ற திறத்தைக் கண்டு

      நாமகளும் கொள்மகிழ்ச்சிக்(கு) அளவே இல்லை !

முப்பதுசெல் ஆண்டுகளாய்த் தமிழ கத்தில்

     முயற்சிபல மேற்கொண்டு மாரி யப்பன்

தப்பெதுவும் இல்லாமல் சங்கீ தத்தைச்

       சரளமுடன் பாடுகின்ற திறத்தைப் பெற்றே

முப்போதும் மலேசியத்தில் தமிழி சையை

      முழுமூச்சாய் வளர்த்துவரும் தொண்டை இங்கே

அப்போதும் இப்போதும் எப்போ தும்தான்

     அவ்வளவாய் ஆதரிப்போர் இல்லை; ஏனோ ?

ஆனாலும் எதற்கேனும் அளவு மீறி

     ஆசைதனை வளர்க்காமல் ஆமை போன்றே

தானாக *ஐந்தடக்கி* வாழும் வித்தை

     தனைக்கற்ற மாரியப்பன் என்றும் தன்றன்

தேனான குரலாலே பாடப் பாடத்

    தேடிவந்து பலர்போற்ற வாழ்வார் என்றும் !

தூணாகிக் கட்டடத்தைத் தாங்கல் போன்று

     தூயிசையைத் தாங்கும்அவர் நீடு வாழ்க !

தொல்லிசையை மெல்லிசைபோல் எளிதில் பாடிச்

       சொக்கவைத்த *சுந்தரம்பாள்*, மாரி யப்பன்

நல்லிசையின் ஆண்பிறப்பாய் வந்த தைப்போல்

      நாம்நினைக்க வாழ்கின்றார் ; மலேசி யாவில்

உள்மக்க ளுள்தமிழர்,மற்றோர் சேர்ந்தே

       உவப்போடு வாழ்த்துதற்கும் உரியார் ஆனார் !

நல்விருது பலபெறவே தகுதி மிக்கார் ;

     ஞாலத்தில் மாரியப்பன் நாளும் வாழ்க !

மாரியப்பன் *தொண்ணூறாம்* அகவை நாளை

     மகிழ்வுடனே *அசன்கனி* யார் பகிர்ந்த போது

மாரியப்பன் அவர்களுக்கு *இசைவேள்* என்று

     வழங்குமொரு *விருது* அளிக்க ஆசைஎன்றார் !

யாரிதனை *இசைத்தென்ற லார்க்* ளிப்பார்?

     என்றாய்ந்து கொண்டிருக்க எண்ண மின்றி

மாரியப்ப னுக்கிந்நாள்  *அசனார்* சார்பில்

    மகிழ்ச்சியுடன்  வழங்கினமே *இசைவேள்* பட்டம் !

இவ்விருதை *அசன்கனியார்* அவரும் யாமும்

      இணைந்தளிக்க வயதில்லை ; உண்மை ,ஆயின்

செவ்விருதை அவர்க்களிக்க எங்க ளுக்கே

      செந்தமிழால் தகுதியுண்டாம் என்ப தாலே

அவ்விருதைக் கலைமகளாய் உருப்பெற் றுள்ள

      அருள்மிகுந்த தமிழ்த்தாயின் சார்பில் யாமும்

செவ்வைமன மாரியப்ப னார்க்குச் சூட்டச்

     செகமிதனை வழிமொழிய வேண்டி னோமே !

                                                                    *பாதாசன்*

அருஞ்சொல் விளக்கம் :-

1 . பொன்றாமல்குறையாமல்

2 .ஐந்தடக்கி : ஐம்புலன்களையும் அடக்கி

இசைத்தென்றல் மாரியப்பன் அவர்களுக்கு *இசைவேள்* வழங்கப்பட வேண்டும் என்னும் தம் விருப்பத்தைமுதன்முதலில் முன்மொழிந்த கவிஞர் அசன்கனி, இசைதென்றலாரை வாழ்த்திப் பாடிய குறுங்கவி கீழே :-

தொண்ணூறைத் தொட்டுவிட்ட

     தொன்மைக் காலத் தோழரே

எண்ணத்தில் இன்றைக்கும்

     இனிக்கின்ற இசைக்கலைஞா

மண்ணகத்தில் நூறாண்டு

    வயதினையே தாண்டியும்நீ

திண்ணமுடன் வாழ்ந்திடவே

   செந்தமிழால் வாழ்த்தினனே !