தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழாமாநாட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடியதொ.மு.ச–வினுடைய பேரவையினுடைய பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு. சண்முகம் அவர்களே,
எனக்கு முன்னால் எழுச்சியோடு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன்
திரு. துரைமுருகன் அவர்களே,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலாளர் திரு.கே.என். நேருஅவர்களே,
நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே,
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே,
நிறைவாக நன்றி நல்கயிருக்கக்கூடிய தொ.மு.ச–வினுடைய பொருளாளர்
திரு. கி. நடராசன் அவர்களே,
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் நிர்வாகிகளே,
தொ.மு.ச–வினுடைய தொழிற் சங்கத் தோழர்களே,
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே,
என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும், உயிரான அன்புஉடன்பிறப்புக்களே,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையினுடைய 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா நிகழ்ச்சிமூன்று நாட்களாக நடைபெற்று அதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நிறைவாக நானும் பங்கேற்று உங்களிடத்தில் சிலகருத்துக்களை எடுத்து வைக்கக்கூடிய நல்லதொரு வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன். வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், இங்கே வந்திருக்கக்கூடிய உங்கள் அத்தனை பேருக்கும் நான் இதயப்பூர்வமானநன்றியை, வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் சீருடை இருப்பதைப் போல – கழகத்தில் கருப்பும், சிவப்பும் கலந்திருக்கக்கூடிய சட்டை, பேண்ட் சீருடையாக அணிந்து இங்கு வந்து கலந்துக்கொண்டிருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் பார்க்கிறேன். கம்பீரமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கக்கூடிய இந்த காட்சியைப் பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்க்கிறபோது, அத்தனை பேருக்கும் எழுச்சியும், உணர்ச்சியும் நிச்சயமாக ஏற்படும், அதுவும் எங்களுக்கும்ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அத்தகைய தொழிலாளர்தோழர்கள் கூடியுள்ள 25-ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டில் எனக்கும் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை தந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் இந்த தொழிற்சங்கத்தினுடைய, இந்ததொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையினுடைய வரலாற்று சம்பவங்களையெல்லாம்வரவேற்புரையாற்றிய நம்முடைய சண்முகம் அவர்களும், பொதுச் செயலாளர் அவர்களும், முதன்மைச்செயலாளர் அவர்களும் இங்கே தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் 1923-ஆம் ஆண்டு மே நாளை கொண்டாடியதைத் தொடர்ந்து இந்தஆண்டு மே நாள் நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம். அத்தகைய நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டமக்களுக்காக உருவான நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்பாக விளங்கும் இந்ததொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையினுடைய பொன்விழா காண்பது நமக்கெல்லாம் பெருமைகொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
தொழிலாளர் அணியோடு எனக்கு எப்போதும் ஒரு நட்பு கலந்த ஒரு மோதல் ஒன்று உண்டு. மோதலும்சொல்லலாம், ஊடலும் சொல்லலாம். ஆனால் மோதலாக இருந்தாலும், ஊடலாக இருந்தாலும்எப்போதும் உங்களுடன் நான் கூடலாகத்தான் இருப்பேன். என்ன மோதல், கூடல் சொல்றானே என்றுசிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், என்ன என்று ஒரு கேள்வி கூட எழுந்திருக்கலாம். இன்றைக்குஅறிவாலயம் தலைமைக் கழகத்தினுடைய செயலகமாக, கழகத்தினுடைய தலைமைக் கழகமாகசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தொடக்க காலத்தில் வடசென்னைபகுதியில் இருக்கக்கூடிய ராயபுரத்தில் அறிவகம். அதற்குப் பிறகு அன்பகம். அதற்குப் பிறகுஅறிவாலயத்தை கட்டி முடித்ததற்குப் பிறகு தலைமைக் கழகம் அன்பகத்திலிருந்து அறிவாலயத்திற்குமாற்றப்பட்டது. அப்போது மாற்றப்பட்டதற்குப் பிறகு, அந்த அன்பகத்தை தொழிலாளர் அணிக்குபயன்படுத்த தரவேண்டும் என்று ஒரு கோரிக்கை அவர்கள் தரப்பிலிருந்து வந்தது. இளைஞரணியின்செயலாளராக இருந்த நான் இளைஞரணிக்கு பயன்படுத்த அனுமதி தரவேண்டும் என் பக்கத்திலிருந்துகோரிக்கையை தலைமையிடத்தில் நாங்கள் எடுத்து வைத்தோம். அப்படிப்பட்ட கோரிக்கைவைத்தபோது, தலைவரும், நம்முடைய பேராசிரியர் அவர்களும், 2 அமைப்பு மட்டுமல்ல மற்றஅமைப்புகளும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்போது நாங்கள் இப்போது ஒருபோட்டி வைக்கிறோம். “பத்து லட்சம் ரூபாயை திரட்டிக் கொண்டு யார் முதலில் எங்களிடத்திலேதருகிறார்களோ அவர்கள் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி தருகிறோம்” என்று சொன்னார்கள். தொழிலாளர் அணியோடு போட்டி போடுவது என்பது சாதாரண விஷயமல்ல. முயற்சித்தோம், வெற்றியும்கண்டோம். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் இப்போது நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம்இளைஞர்கள் ஆயிற்றே அவர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்று ஓரளவிற்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்என்றுதான் எனக்கு எண்ணம். இருந்தாலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை நடத்தி, பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடியேற்று விழாக்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 1000 ரூபாய், 2000 ரூபாய், 500 ரூபாய் என்று வசூலித்து, உணவருந்தவேண்டுமென்று சொன்னால், காப்பி, டீ சாப்பிட வேண்டுமென்று சொன்னால், டிபன் சாப்பிடவேண்டுமென்று சொன்னால், வீட்டில் வந்து படுத்துத் தூங்க வேண்டுமென்று சொன்னால், அததற்கு ஒருகட்டணத்தை நிர்ணயித்து அப்படி வசூலித்து 10 லட்சம் அல்ல, 11 லட்சம் ரூபாயை திரட்டி, தலைவரிடத்திலும், பொதுச் செயலாளரிடத்திலும் வழங்கி அதற்குப் பிறகு நாங்கள் அன்பகத்தைபயன்படுத்துவதற்கு அனுமதியைப் பெற்றோம். இறுதியாக அந்த வெற்றி எங்களுக்கு கிடைத்திருந்தாலும்அதைக் கிடைப்பதற்கு எங்களுக்கு ஊக்கம் தந்தவர்கள் யார் என்று கேட்டால் இங்கேஅமர்ந்திருக்கக்கூடிய இந்த தொழிலாளர் அணி தான் என்பதை நான் நிச்சயம் மறக்க மாட்டேன். தூண்டியது நீங்கள் தான்.
திராவிட முன்னேற்றக் கழகம், உழைக்கின்ற மக்கள், அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுகின்ற ஒருஇயக்கமாக, சாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள் அனைவரும் தொழிலாளர்கள்தான் என்று சொன்னவர்தந்தை பெரியார் அவர்கள். அதனால் தான் ‘திராவிட விவசாய – தொழிலாளர் சங்கம்’ என்ற அமைப்பைத்தொடங்கினார். அந்த வழித்தடத்தில் தான் தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்று பேரறிஞர்அண்ணா அவர்கள் சொன்னார்கள். இங்கே நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் சொன்னதுபோல, தனித்தனியாக இயங்கி வந்த சங்கங்களையெல்லாம் இணைத்து ஒரு மத்திய தொழிற்சங்கமாகஉருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் உரு அமைத்துத் தந்தார். அதையொட்டி ஒரு குழுவினையும் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையின் பேரில்தான் தொழிலாளர்முன்னேற்றச் சங்கப் பேரவை என்னும் அமைப்பை 1.05.1970 அன்று அதற்குரிய சட்டவிதிகளின்படிதுவக்கி வைத்தார். தொ.மு.ச. பேரவைக்கென்று ஒரு கொடியையும் உருவாக்கிக் கொடுத்தார்.
தொ.மு.ச. பேரவை துவங்கிய காலத்தில் அனைத்து துறையிலும் இணைப்புச் சங்கங்கள்உருவாக்கப்பட்டது. கழகத்தின் முதல் தொழிலாளர் அணியின் செயலாளராக நம்முடைய இனமானப்பேராசிரியர் அன்பழகன் அவர்கள்தான் இருந்தார். முதல் தலைவராக நாவுக்கரசர் நாஞ்சிலார், பொதுச்செயலாளராக காட்டூர் கோபால் அவர்கள் நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு நெருக்கடி காலம், Emergency. அந்த நெருக்கடி காலத்தில் தலைவர்களெல்லாம் சிறைக்குச் சென்று விட்டார்கள். அதனால்அந்த அமைப்பில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால் 1982-க்குப் பிறகு மீண்டும் இணைப்புச் சங்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வந்தது. அப்போது பேரவையின் தலைவராக இருந்த நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன் செ.குப்புசாமிஅவர்கள், பொதுச்செயலாளராக இருந்த காட்டூர் கோபால் அவர்கள், பொருளாளராக இருந்தசி.இரத்தினசபாபதி அவர்கள் இதை மீண்டும் சுறுசுறுப்பாக இயக்கினார்கள். அவர்களோடு எத்தனையோதோழர்கள் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் நம்முடைய சங்கத்தின்பொதுச்செயலாளர் பொறுப்பை நம்முடைய மு.சண்முகம் அவர்கள் ஏற்றுக்கொண்டு இன்று வரையில்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாட்டினால்தான்2008-ஆம் ஆண்டு பேரவைக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. அதனால் ஆண்டுதோறும்நடைபெறும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டிலும், பல்வேறு குழுக்களிலும் கலந்து கொண்டுபேரவையின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிட்டியது. 2012 மற்றும் 2017-ஆம் ஆகியஆண்டுகளில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நம்முடைய சண்முகம்அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக தொழிற்சங்கத்தினுடைய உரிமைகளை எடுத்துச் சொன்னார்.
தொ.மு.ச. பேரவையின் நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்கள்உருவாகியிருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில அரசு சிறந்த தொழிற்சங்கமாக
LPF-ஐத் தேர்வு செய்து பரிசும் வழங்கி பெருமைப்படுத்திருக்கிறது. போக்குவரத்து கழக தொழிற்சங்கப்பணிகளை பாராட்டி, சர்வதேச தொழிலாளர் பேரவையும் நம்முடைய சங்கங்களை இணைத்துக்கொண்டது.
1969-ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன்நம்முடைய அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னதுபோல, தொழிலாளர் நலனில் தனிக்கவனம்செலுத்த வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள் “தொழில் – தொழிலாளர் நலம் – கூட்டுறவு” என ஒன்றாக இருந்த மூன்றுதுறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும்உருவாக்கினார்கள்.
இரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்றிருக்கக்கூடியஉரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில்தான், 1969-ஆம் ஆண்டில் மே 1 ஊதியத்தோடு கூடிய விடுமுறை, பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றிநடைமுறைப்படுத்தியது நம்முடைய தலைவர் கலைஞருடைய மகத்தான சாதனைகளில் அதுவும் ஒன்று.
அவசரச் சட்டம் பிறப்பித்து, வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வழிவகை செய்ததுகழக அரசுதான்.
பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க பலம் இல்லாததால்போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு, தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்ததும் கழக அரசுதான்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் “பணிக்கொடை” வழங்கும்திட்டத்தைச் செயல்படுத்தியதும் கழக அரசுதான்.
விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் ‘தொழில்–விபத்துநிவாரண நிதித் திட்டத்தை’ உருவாக்கியதும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன்,
➢ விவசாயத் தொழிலாளர் நல வாரியம்,
➢ மீனவர் நலவாரியம்,
➢ கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம்,
➢ தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் – உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கிஉதவிகள் செய்தது தி.மு.க. அரசினுடைய மிகப் பெரிய மகத்தான சாதனை.
1990-ஆம் ஆண்டு மே நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மேதின பூங்கா” என்று பெயரிட்டு, மே நாள் நினைவுச் சின்னத்தை நிறுவியவரும் நம்முடையமுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வாதாட உருவானதுதான் உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம்மற்றும் தொழிலாளர் நல வாரிய சட்டம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. கழகஆட்சியின்போது உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தில் உள்ள பிரிவின் அடிப்படையில் பலவாரியங்கள் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் மத்தியிலே அமைப்புசாரா வாரியங்களுக்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கியது, பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கியது கழக ஆட்சி.
அதேபோல் மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கும்அனைத்து சலுகைகளும் பெற்றுத்தந்தது கழக அரசு.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களைநிரந்தரப்படுத்தி அவர்களுக்கும் பணிப் பலன்களை பெற்றுத்தந்தது கழக அரசு.
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு பணிக்கேற்ற ஊதியம் வழங்கியதும் கழக அரசுதான்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அப்பரன்டீஸ் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் போன்ற பல்வேறு வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம்வழங்கியதும் கழக அரசு.
தொழில் வளருவதற்கு தொழிலாளர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த தலைவர் கலைஞர்அவர்கள், குறைந்தபட்ச போனஸ் 8.33 விழுக்காடு மற்றும் அதிகபட்ச போனஸ் 20 விழுக்காடு எனஒன்றிய அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வரச் செய்ததும் கழக அரசுதான்.
அந்த வழியில்தான் இன்றைக்கு உங்கள் அன்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நமதுதிராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில், 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டுள்ளது.
25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குஇருக்கை வசதி ஏற்படுத்தித் தர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கானதொழிலாளர்களுடைய மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு மிகப் பெரிய அறிவிப்பாகும்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த சுமைதூக்கும்தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திருக்கிறோம்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடைய ஊதிய உயர்வை மூன்றாண்டுகளாக நிலுவையில்விட்டுச் சென்ற அ.தி.மு.க. அரசைப் போல் இல்லாமல் ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய ஊதியமுரண்பாடுகளைக் களைந்து 5 விழுக்காடு ஊதிய உயர்வையும், ஊதிய அட்டவணை முறையையும்அளித்திருக்கிறோம்.
ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து 12 மத்தியதொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் தொ.மு.ச. பேரவையும் கலந்து கொண்டு இந்தியஅளவில் உழைக்கின்ற மக்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றது. அதற்கான உரிமையைதலைமைக் கழகத்தின் சார்பில் தொ.மு.ச.-விற்கு வழங்கி இருக்கிறோம்.
இந்தப் பேரவை அமைப்பில்தான், மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் ஜனநாயக முறைப்படிநடைபெற்றது. தொழிலாளர்களே, தொழிலாளர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்துசெயல்படக்கூடிய ஒரு ஜனநாயக அமைப்பாக சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகின்றது.
தொழிலாளர் தோழர்கள் தங்கள் உழைப்போடு சேர்ந்து உங்கள் உடல் நலத்திலும் அக்கறைசெலுத்துங்கள் என்று உங்களில் ஒருவனாக, இந்தத் தருணத்தில் உங்கள் அத்தனை பேரையும் நான்கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். உங்கள் குழந்தைகளை நன்குபடிக்க வையுங்கள். கல்லூரிகள், உயர்கல்வி வரை நிச்சயமாக படிக்க வைக்கவேண்டும். அதுதான்அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்தாகும்.
தொழிலாளர் தோழர்களின் மகன், மகள் – மருத்துவராக – பொறியாளராக – வழக்கறிஞராக – இன்னும் மேலான தகுதிகளைப் பெற வேண்டும்.
நமது திராவிட மாடல் அரசு என்பது,
❖ ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு!
❖ பாடுபடும் பாட்டாளிகளுக்கான அரசு!
❖ உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசு.
நமது அரசு தொழிலாளர் நலன் காக்க செய்துள்ள திட்டங்களையும், சாதனைகளையும் அனைத்துத்தொழிலாளத் தோழர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் – தொ.மு.ச. தோழர்களான உங்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மேதைகளாகத் திகழ்ந்த ‘சிந்தனைச் சிற்பி’ சிங்கார வேலர் அவர்களும்‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. அவர்களும் தொழிற்சங்கங்களின் மூலமாக வளர்ந்தவர்கள். தொழிலாளர் தலைவர்களாக வளர்ந்து நாட்டின் தலைவர்களாக வளர்ந்தார்கள். நம்முடையபேராசிரியர் அவர்களும், நாஞ்சிலார் அவர்களும் தொழிற்சங்கத்தின் மூலமாகதான் வளர்ந்தவர்கள்.
அத்தகைய ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொ.மு.ச. தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த நேரத்தில் நன்றியோடு, மகிழ்ச்சியோடு, பெருமையோடு, பூரிப்போடு உங்களின் ஒருவனாக என்றைக்கும் இருப்பேன் என்பதை மாத்திரம்இந்த நேரத்தில் உறுதியோடு எடுத்துச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.