மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில், மதுரை பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்க வேண்டும் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆண்டு முதலமைச்சராக  இருந்தபோது உத்தரவிட்டு அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 11 ஆண்டுகள் போராடிய பின்பு கடந்த  2019ம் ஆண்டு 86 உறுப்பினர்களுக்கு மதுரை சூர்யா நகரில் அரசு வீட்டுமனை  வழங்கப்பட்டது. இதில் தினகரன், ஹிந்து, ஹிந்து தமிழ், தினமலர், தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட முக்கிய அனுபவம் வாய்ந்த முன்னணி பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 86 உறுப்பினர்களில் 46 பேர் ரூ5,25,000 செலுத்தி வீட்டு மனைக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும், மீதம் இருக்கும் உறுப்பினர்கள் விரைவில் மேற்காண் தொகையைச் செலுத்தி பட்டா பெற தயாராக உள்ள இந்த சூழலில் வீட்டுமனை உள்ள 50 கிலோ மீட்டர் சுற்றளவில் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு எவ்வித சொத்துகளும் இருக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும், இந்த உத்தரவைத் தளர்த்த வேண்டி பத்திரிகையாளர்கள் அரசுக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி பட்டா பெற்ற 38 பேரின் பட்டாவை முன் தேதியிட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது ஏற்புடையது அல்ல.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா என்ற அரசின் கொள்கை முடிவில் மாவட்டம் நிர்வாகம் தலையிடுவது வருந்தத்தக்கது. மதுரை தவிர்த்துப் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதில் இதுபோன்ற நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை எனப் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை பத்திரிகையாளர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த விஷயத்தை விசாரித்து பத்திரிகையாளர்களுக்குப் பட்டா ரத்து என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.