சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர்.க.மணிவாசன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று(01.06.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வண்ணம் மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்திவருகின்றார்கள். சுற்றுலா தலங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது வாகன நிறுத்தும் இடம், சுகாதார வளாகம் அமைத்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணிகள் குறித்தகாலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிடவேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்குவரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலாத்துறையின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் குறித்த மிகச் சிறந்தகுறும்படங்கள் தயாரிக்கப்பட்டு பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களை வான்வெளியில் இருந்து கழுகு பார்வையில் பார்க்கும் பரவசத்தை அளிக்கும் வகை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த குறும்படங்கள் மற்றும் புகைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் பார்வையிட்டுள்ளார்கள். tamilnadutourism.tn.gov.in என்ற இணையதள முகவரி, tntourismoffcl என்ற முகவரி, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும், Tamil Nadu Tourism என்ற யூ டியூப் முகவரியிலும் இந்த வீடியோக்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் புகைப்படங்களை பார்வையிட்டு சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு, சுற்றுலாவை நெறிப்படுத்தி சேவையின் தரத்தை உயர்த்தவும் சுற்றுலாப் பயணிகளின்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகச சுற்றுலா, சுற்றுலா முகாம்கள் நடத்துபவர்கள், சுற்றுலா பயணிகளுக்குதங்கள் வீடுகளிலேயே தங்கும் வசதி மற்றும் உணவு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வரும் சுற்றுலாசெயல்பாட்டாளர்களை சுற்றுலாத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தங்கும் வசதி மற்றும் உணவு வழங்குதல் சேவை வழங்கும் செயல்பாட்டாளர்கள் 449 நபர்களும், சுற்றுலா முகாம் செயல்பாட்டாளர்கள் 15 நபர்களும், சாகச சுற்றுலா செயல்பாட்டாளர்கள் 9 நபர்களும் என மொத்தம் 473 சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். மற்ற சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, உதவி தலைமை மேலாளர் (ஓட்டல்கள்) திரு.சௌ.வெங்கடேசன், திட்ட பொறியாளர் திரு.பால் ஜெபஞானதாஸ், சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள் திரு.ஜெ.ஜெயக்குமார், திரு.சு.சின்னசாமி உள்படஉள்பட உதவி செயற்பொறியாளர்கள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.