உழைப்பின் உயர்வை காட்டும் படம் ‘எறும்பு’

சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘எறும்பு’. மிக குறந்த செலவில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய பொட்டகத்தை திரையில் திறந்து காட்டிய இயக்குநர் சுரேஷ் ஜி பாராட்டுக்குரியவர். கரும்பு கொல்லையில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளி சார்லி, வட்டிக்கடைகாரர் எம்.எஸ்.பாஸ்கரிடம் ரூ.30000 கடன் வாங்கியிருக்கிறார். வட்டி ரூ.7500. மொத்தம் ரூ.37500 யை உடனடியாக தந்தாகவேண்டும் என்று சார்லியை அவமானப்படுத்துகிறார். கடனை அடைத்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. தங்க நகையை அலங்கரிப்பதைப்போல திரைக்கதையை அலங்கரித்துள்ளார்கள். ஏழையின் சாயலுக்கு  கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சார்லி. குணசித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்த எம்.எஸ்.பாஸ்கரை கொடிய வட்டிக்கடைக்காரராக நடித்திருப்பதை அவரது ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா?.என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு காட்சியும் உழைப்பின் உயர்வை சித்தரிக்கிறது. ஜார்ஜ் மரியனின் வெகுளித்தனம் படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது. சார்லியின் பிள்ளைகளாக நடித்திருக்கும் மோனிகா சிவா, சக்தி ரித்துவிக். இவ்விருவரும்தான் கதையின் கருவாக விளங்குகிறார்கள். இவ்விருவரின் நடிப்பும் பாராட்டுதலுக்குரியது.