தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (26.6.2023) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில்  நடைபெற்ற “சிற்பி” நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை

சிற்பி திட்ட நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடியமாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபுஅவர்களே,

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழிஅவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு சேர்த்திருக்கக்கூடிய மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களே, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களே, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு. பரந்தாமன் அவர்களே, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்களே, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு அவர்களே, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்களே, காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்களே,  என் அன்பிற்கினிய மாணவ, மாணவியர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். முதலில் நீங்கள் எல்லாம் நல்லாயிருக்கிறீர்களா! இந்த சிற்பி திட்டத்தில் கலந்து கொண்ட உங்கள் அனுபவம் எப்படி பயனுள்ளதாக இருந்ததா? நீங்கள் வந்திருக்கக்கூடிய ஆர்வத்தை, உற்சாகத்தை உங்கள் முகமலர்ச்சியைபார்த்தாலும், நீங்கள் எல்லாம் புன்சிரிப்புடன் இருக்கிறீர்கள்!

உங்களுடைய எழுச்சியை, வளர்ச்சியை பார்க்கும்போது உங்களுடைய எனர்ஜி எனக்கும் இப்போது வந்துவிட்டது! இன்னும் சொல்ல வேண்டுமென்றால், என்னோட பள்ளி நினைவுகாலம் எல்லாம் இப்போது வந்து கொண்டிருக்கிறது!  மாணவர்களுக்கு மிகவும் பிடித்த நம்முடைய முன்னாள் பிரதமர் எல்லோருக்குமான இந்தியாவை கனவு கண்ட நேருவோட பெயரால் அமைந்திருக்கின்ற இந்த ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. எல்லோருக்குமான இந்தியாவை, சமத்துவ இந்தியாவை பேணிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு, இந்த நாட்டினுடைய எதிர்காலமாக இருக்கக்கூடிய உங்கள் கையில் இருக்கிறது! நம்மோட திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் எல்லாவற்றிலும் நம்பர்-1 தமிழ்நாடு என்று சொல்கின்ற அளவுக்கு நாம் இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக, கல்வித் துறையில மகத்தான சாதனைகளை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு முக்கியமான சாதனை என்னவென்று கேட்டீர்கள் என்றால், காலை சிற்றுண்டித் திட்டம், அதை நான் பெருமையாக சொல்வேன்.

ஏனென்றால், பசியோட படிக்க வருகின்ற குழந்தைகளுக்கு, முதலில் உணவு! அப்புறம்தான் வகுப்பறை என்று சொல்கின்ற மாதிரியான திட்டம் அது. வயிற்று பசியை போக்கிவிட்டால், உங்களுடைய அறிவுப்பசிக்கு உணவு கிடைத்துவிடும்! இதை மனதில் வைத்துத்தான் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை நாம் உருவாக்கினோம்.

அதேபோல,

இல்லம் தேடிக் கல்வி
நான் முதல்வன்
பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்
“மாணவர் மனசு” என்ற ஆலோசனைப் பெட்டி
கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
வகுப்பறை உற்று நோக்கு செயலி
மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி – ஆகிய திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இந்த வரிசையில்தான், இந்த ‘சிற்பி’ என்ற திட்டத்தை சென்னை காவல்துறை திட்டமிட்டது. இதை நான் தான் தொடங்கி வைத்தேன். நன்றாக படிக்கின்ற மாணவர்கள்,ஒழுக்கத்திலும் நேர்மையிலும் – துணிச்சலிலும் – சமூகப் பொறுப்பிலும் – சிறந்தவர்களாக உருவாக்க நம்முடைய சென்னை மாநகரகத்தின் காவல் ஆணையர் மதிப்பிற்குரிய சங்கர் ஜிவால் அவர்களால் இந்த திட்டத்தை வடிவமைத்து, மாணவர்கள் படிப்பில் School first எடுக்க வைக்கின்ற மாதிரி, ஒழுக்கத்திலும், பொறுப்பிலும், முதன்மையானவர்களாக ஆக்குகின்ற திட்டம்தான் இந்த ‘சிற்பி திட்டம்’ என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 13.09.2021 அன்று  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தத் திட்டத்தைப் பற்றி நான் அறிவித்தேன். சென்னை மாநகரில் இருக்கக்கூடிய 100 அரசு பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்குபெறக்கூடிய வகையில் இது திட்டமிடப்பட்டது. சிறுவர்களை இளமைக் காலம் முதல் பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்கக்கூடிய இந்தத் திட்டம் பயன்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

கடந்த 14.9.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் இதை நான் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டம் மூலம் குற்றமற்ற சிறந்த இளைய சமுதாயத்தினரை உருவாக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக இன்றைக்கு நீங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறீர்கள் அதை பார்த்து நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதை செய்துகாட்டுவதற்கு எல்லா வகைகளிலும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இப்போது நிறைவு விழா நடத்திக்கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு இதற்கான பாடப்புத்தகம், சீருடை தந்தார்களா? உங்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துக் கொண்டு போனார்களா? இந்த ஓராண்டு காலத்தில் சிற்பி மாணவர்களுக்கு கவாத்து, போக்குவரத்து விதிகள், கணிணி வழிக்குற்றங்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், நல்லொழுக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் ஒலி மாசுபாடு, நாட்டுப்பற்று, போதைப் பழக்கம் தடுக்கும் முறைகள், தனிப்பட்ட சுகாதாரம், இயற்கையை பேணுதல், யோகா, மனித நலம், தற்காப்பு, அரசு வேலைக்குச் செல்ல வேண்டிய படிப்புகள், குதிரைப்படை, மோப்ப நாய் பிரிவு, இயற்கை வேளாண்மை,நல்ல  தொடுகை, தீய தொடுகை கற்பித்தல் மற்றும் உதவி தொலைபேசி எண்கள் போன்ற வகுப்புகள் அந்தந்த துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய வல்லுனர்களாலும், காவல் துறையினராலும், சிற்பி நோடல் ஆசிரியர்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் போன்ற பயிற்சிகளுக்கு செல்லும்போது தான் இதுபோன்ற பயிற்சிகளை உங்களுக்கு தருவார்கள். ஆனால், மிகச் சிறு வயதிலேயே இந்த பயிற்சியை தமிழ்நாடு அரசு உங்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறீர்கள். அதையெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னிடத்தில் பெருமையாக சொன்னார்கள். முக்கியமாக, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 5000 சிற்பி மாணவர்கள் சென்னை எழும்பூர் முதல் வண்டலூர் வரை சிறப்பு ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.

இயற்கையை பேணும் விதமாக ஐந்தாயிரம் குழந்தைகளும் ஐந்து இலட்சம் விதைப் பந்துகள் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமில்லாமல், ஐந்தாயிரம் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறீர்கள். 74-ஆவது குடியரசு நாள் விழாவில், சிற்பி மாணவர் படையினராக அணிவகுப்பில் கலந்து கொண்டது அதுவும் மிடுக்கான நடையில் என்னை மிகவும் வியப்படைய வைத்திருக்கிறது. இப்படி உங்களோட சாதனைகள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் வியப்படைய வைத்திருக்கிறது. இந்த இளம் வயதில் இந்தச் சாதனைகளைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது நீங்கள் இதை ஒரு பெரிய மைல் கல்லாக  நினைக்கவேண்டும்.

இதுபோன்ற செயல்கள் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும், உங்களுடைய சுற்றத்தையும் சீர்மைப்படுத்தும். அதோடு, சிறார் குற்றங்கள் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு சிறப்பான கவனத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறது. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களோட கவனக் குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை காரணமாக இருக்கிறது.

இவற்றைக்  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க இது போன்ற திட்டங்கள் கைகொடுக்கும். போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமை திறனை மேம்படுத்துதல்,பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல், பொது மக்களோடு தொடர்பு, இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க செய்தல், தேசிய விழாக்களை கொண்டாடுதல், தேசிய சின்னங்களுக்கு மரியாதை செய்தல், மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் – ஆகிய பண்புகளை சிறுவர்களிடையே உருவாக்க வேண்டும்.

ஏனென்றால், இன்றைய இளைஞர்களே, நாளைய எதிர்காலம்! இளைஞர்களை சீர்படுத்தினாலே, எதிர்காலத்தை சீர்படுத்த முடியும். அப்படி உருவாகக்கூடிய இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை நிச்சயமாக செதுக்குவார்கள். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. என்னைப் பொறுத்தவரை, மாணவர்களை தரமான‘மனிதர்களாக’ உருவாக்குதே அரசாங்கத்தின் கடமையாக நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக ‘நான் முதல்வன்’ என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்துத் திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கின்ற திட்டமாக இது அமைந்திருக்கிறது.

இதனுடைய பயன், தலைமுறை தலைமுறைக்கு நிச்சயமாக தொடரும். 100 விழுக்காடு படிப்பறிவு என்பதை நாம் நிச்சயம் எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும்.

இங்கே வந்திருக்கின்ற உங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். பள்ளியோடு கல்வியை நிறுத்திடாமல் எல்லோரும் கல்லூரிகளுக்கு போகவேண்டும். நீங்கக் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்! நன்றாக விளையாடி உடலை உறுதி செய்யுங்கள்! சமூகத்தைப் படியுங்கள்! அந்தக் கல்வியின் மூலமாக பகுத்தறிவையும், சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்! அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்ளுங்கள்! அந்தப் படிப்பை வைத்து சிந்தியுங்கள்! புதிய புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்துங்கள்! படிப்பு மட்டும்தான் உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து! உங்களுடைய படிப்பையும் திறமையும் பார்த்து, பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை அழைத்து வேலை கொடுக்க வேண்டும். நீங்களும் தொழில் தொடங்கி, நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்.

உங்களோட மற்ற கவலைகளை போக்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நான் இருக்கேன்! நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. படிக்கின்ற காலத்தில் உங்களுக்கு வேறு எதிலும் கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது.  இன்றைக்கு போதை ஒழிப்பு நாள்! அதனால் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்தவிதமான போதைப் பழக்கத்திற்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடாதீர்கள். இன்றைக்கு உலக போதை ஒழிப்பு நாள்! உங்களை சுத்தியிருகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது… “போதை என்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் அது மிக, மிக கேடு! அதனை புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும்.” இதைத்தான் நீங்கள் எல்லோருக்கும் சொல்லவேண்டும். சொல்லுவீர்களாசொல்லுங்க சொல்லுவீர்களாஎல்லோருக்கும்?

அன்புச் செல்வங்களே, அன்பு மாணவ கண்மணிகளே, நீங்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, நம்பிக்கைக் கொண்டவர்களாக, நீதியில், நேர்மையில் உறுதிகொண்டவர்களாக திகழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

ஆல் தி வெரி பெஸ்ட்! நன்றி! வணக்கம்!