சென்னை சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் தமிழ்நாடு – வியட்நாம் இடையே சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்து வியட்நாம் மக்கள் குழுவின் துணைத்தலைவர் திரு.டுயாங் மா தைய்ப் (Mr.Duong Mah Tiep) அவர்கள் தலைமையிலான வியட்நாம் குழுவினர் மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் பேசுகையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வது குறித்தும், தமிழ்நாட்டின் விமான போக்குவரத்து வசதிகள், துறைமுகங்கள், சாலைப்போக்குவரத்து வசதிகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்களின் சிறப்புகள், கைவினைப்பொருட்கள், பண்பாட்டு சிறப்புகள், தமிழ்நாட்டின் தொன்மை, பழமை, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, மருத்துவ சிகிச்சை சிறப்புகள், மருத்துவ சுற்றுலா வாய்ப்புகள் ஆகியவை குறித்து வியட்நாம் குழுவினருக்கு புகைப்படங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் வியட்நாமில் உள்ள சுற்றுலாத்தலங்கள், அருவிகள், மலைப்பகுதிகள், கைவினைப்பொருட்கள், பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து திரையிடப்பட்ட வீடியோ குறும்படங்களை சுற்றுலா பயண எற்பாட்டாளர்கள் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டார்கள்.
தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா பயண திட்டங்கள் குறித்து தெரிவித்ததோடு, வியட்நாம் சுற்றுலாத்தலங்களுக்கு அருகில் உள்ள பண்டைய தமிழ்நாட்டின் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்த பயணத்திட்டங்களை வகுக்க வேண்டியது குறித்தும், விசா நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவது குறித்தும், விமான போக்குவரத்து மேம்பாடு, மருத்துவ சுற்றுலா மேற்கொள்ள வியட்நாமில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள். வியட்நாம் மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தங்கள் நிறுவனத் தொடர்பு விவரங்களை பரிமாறிக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, உதவி இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.சி.சீனிவாசன், சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் திரு.ஜெ.ஜெயக்குமார், வெளியீட்டு அலுவலர் திரு.கோ.சிவகுமார், வியட்நாம் அரசின் சுகாதாரத்துறை, தகவல் தொடர்புத்துறை, வெளியுறவுத்துறை, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, முதலீடு மற்றும் திட்டத்துறை அலுவலர்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பாளர்கள், காய்கறிகள், மிளகு, காபி உற்பத்தியாளர்கள், திரு.ஸ்ரீகரன் பாலன் (மதுரா டிராவல்ஸ்), திரு.டி.கருணாநிதி (வெல்கம் டூர்ஸ் & டிராவல்ஸ்), திரு.சரவணன் (சோழன் டூர்ஸ் பிரைவேட் லிட்) திரு.எ.அஃப்சல் (பர்வீன் டிராவல்ஸ்), திருமதி.டி.தேவகி (அவோசெட் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரைவேட் லிட்), திரு.அலோக் (தாமஸ் குக்), திரு.அஜித் (ஃபிக் யுவர் ட்ரெயல்) மற்றும் சுற்றுலாத்துறையினர் கலந்து கொண்டனர்.