சென்னை சுற்றுலா வளாகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளின்அறைகள் முன்பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு அலுவலகத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (20.07.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாஇயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் (24×7) செயல்படும் சுற்றுலா உதவிமையம் (Tourism Help Desk) மற்றும் கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். இந்த ஆண்டு முத்தமிழறிஞர் அவர்களின்நூற்றாண்டு கொண்டாடப்படுகின்றது. நாட்டின் அன்னிய செலாவணி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும்விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலாத் பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்துசேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளைவழங்கி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சுற்றுலாத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரியமுயற்சிகளால் விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாகவிளங்கி வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்து. வருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதிசுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் பொதுமக்களுக்கு தங்கும் வசதிசேவையை வழங்கி வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தங்கும் விடுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகின்றது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மொத்தமாகஅனைத்து அறைகளையும் பதிவு செய்பவர்களுக்கும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்குபவர்கள், வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாகதங்குபவர்களுக்கு பல வகையான கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்–பெங்களுர், குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை–மாமல்லபுரம், காஞ்சிபுரம்– மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா–மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயணதிட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களைபார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொது மக்களின்வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல்தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிபயண திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதனவசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசுபேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை கொண்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத் திட்டங்களின் மூலம் ஏப்ரல் 2022 முதல்மார்ச் 2023 வரையிலான ஒரு வருட காலத்தில் மொத்தம் 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டார்கள். (திருப்பதி சுற்றுலா மேற்கொண்டவர்கள் – 83,897 நபர்கள்) [சென்னையில் இருந்து79,244 நபர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து – 4,653 நபர்கள்] 2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம்மேற்கொண்டுள்ளார்கள். (திருப்பதி சுற்றுலா மேற்கொண்டவர்கள் – 36,636) [சென்னையில் இருந்து 33,284 நபர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து – 3,352 ]
சென்ற ஆண்டு (2022 -23) நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத் தலங்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் பல்வேறு சுற்றுலாக்கள் குறித்த தகவல்கள், முன்பதிவு ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கவும் மற்றும்சுற்றுலாவின்போது ஏற்படும் குறைகளை களைய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு சுற்றுலாதலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் (24×7) செயல்படும் சுற்றுலா உதவி மையம் (Tourism Help Desk) மற்றும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2023 -24) நிதிநிலை அறிக்கையில் திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை. இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூரத்தி செய்ய ரூ.2.80 கோடி செலவில் 43 இருக்கைகளுடன் கூடிய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் பேருந்து வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்தமேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு கூடுதல் செயலாளர் திரு.வே.முத்தையன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும்பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, முதன்மை கணக்கு அலுவலர் திரு.எஸ்.கணேஷ் கார்த்திகேயன், உதவிதலைமை மேலாளர் (ஓட்டல்கள்) திரு.சௌ.வெங்கடேசன் உள்பட மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவிசெயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.