இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு பிரத்யேக பணிக் குழு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டம் ஜி 20 நாடுகள் மற்றும் அவற்றின் தலைமை, சர்வதேச அமைப்புகள் மற்றும் அறிவுசார் கூட்டாளர்களை ஒன்றிணைத்து, பணிக்குழுவின் முன்னுரிமை பகுதிகள் தொடர்பான பகிரப்பட்ட கடமைகள் மற்றும் முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதில் ஈடுபடும். இந்தப் பகுதிகளில் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், பேரழிவு மற்றும் பருவநிலை நெகிழ்திறன் உள்கட்டமைப்பு, பேரழிவு அபாயத் தணிப்புக்கான நிதி கட்டமைப்பு, பேரழிவு மீட்பு அமைப்பு மற்றும் பேரழிவு அபாயத் தணிப்புக்கான சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவை அடங்கும்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி திருமதி மாமி மிசுடோரி, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அமைப்புகள் மற்றும் உத்திகளுக்கான துணைத் தலைவர் டாக்டர் ராதித்யா ஜாதி, புதுதில்லியில் உள்ள பிரேசில் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு பெட்ரோ பியாசி டி சோசா, ஜி 20 ஷெர்பா தூதர் திரு அமிதாப் காந்த் ஆகியோரின் பங்கேற்பு பேரழிவு அபாயத் தணிப்பை ஊக்குவிப்பதற்கும்,நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்குமான உறுதிப்பாட்டை அர்ப்பணிக்கும்.
அனைவராலும் அங்கீகரிக்கப்படும் அறிக்கை, ஜி 20 நாடுகளுக்கு ஒரு முக்கிய வழிகாட்டும் ஆவணமாக செயல்படும். இது பேரழிவு அபாயத் தணிப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகளை இது கோடிட்டுக் காட்டும். முடிவுகளை எடுப்பதில் பேரழிவு அபாயத் தணிப்பை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும். பேரழிவுகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஜி 20 நாடுகளின் ஒத்துழைப்பில் பேரழிவு அபாயத் தணிப்பை பிரதானப்படுத்த வேண்டும்.
தொழில்நுட்ப அமர்வுகளுக்கு இடையே, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்), பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சிடிஆர்ஐ) மற்றும் ஐ.நா. பெண்கள் போன்ற அறிவுசார் முகவர்களால் பக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். உள்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புவதற்கும், பேரழிவைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், பெண்கள் தலைமையிலான மற்றும் சமூக அடிப்படையிலான பேரழிவு அபாயத் தணிப்பை மேம்படுத்துவதற்கும் மீள்திறன் ஈவுத்தொகையைப் பெறுவதில் பக்க நிகழ்வுகள் கவனம் செலுத்தும்.
ஜி 20 பிரதிநிதிகள் மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பார்வையிடவும், பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் பேரழிவுகளின் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் (டி.ஆர்.ஆர்.டபிள்யூ.ஜி) மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20கூட்டம் சென்னையில் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்க கூட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஜூலை 23 அன்று ‘சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரழிவு அபாயத் தணிப்பில் அவற்றின் பயன்பாடு’ குறித்த ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்படட்டுள்ளது, இது டி.ஆர்.ஆர்.டபிள்யூ.ஜிக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை எவ்வாறு அளவிடுவது என்பது குறித்த ஆழமான புரிதலைப் பகிர்ந்து கொள்ளும். ஃபெமா, இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (பி.என்.பி.பி), என்.டி.எம்.ஏ இந்தியா, தேசிய புனல் மின் கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மைக்ரோசாப்ட் இந்தியா, தமிழக அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற அதிகாரிகள் குழு விவாதத்தில் அங்கம் வகித்தனர்.