*அறிந்தவரும் தெரிந்தவரும்* *யார்க்களிப்பார் வாக்கு…???

*மூன்று R ஐத்* தேர்தலிலே பேசாதீர் என்று

       முன்னுரையாய் இத்தேர்தல் பரப்புரைக்கே அரசு

ஆன்றதொரு *விதிமுறையை* அறிவிப்பாய்ச் செய்து

      அருகில்வரும் தேர்தல்நாள் நேர்மையுடன் நடக்க

வேண்டுமெனும் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் !

       விளையாட்டாய் *மூன்று R ஐத்*  தேர்தல்பரப் புரையில்

வேண்டுமென்றே வாய்த்துடுக்காய்ப் பேசிடவே மக்காள்

       விரும்பாதீர் என்பதுதான் அரசாங்க ஆணை !

*இனவாதம், மதவாதம், அரசாளர்* இவையே

        இன்றுசொலும் *மூன்று R இன்* விளக்கமெனச் சொல்வார் !

இனம்பற்றி மதம்பற்றி அரசாளர் பற்றி

      இத்தேர்தல் பரப்புரையில் எதும்பேச வேண்டாம் !

தினமிதனை *வேட்பாளர்,வாக்காளர்* யாரும்

       தேர்தல்நலம் கருதியெதும் பேசுவதே தப்பு

கணப்பொழுதும் இதைநினைத்தே அனைவருடை பேச்சும்

      கண்ணியமாய் அமைந்திடவே வேண்டுமெனக் கொள்வீர் !

மேற்கண்ட *மூன்று R * பேசுவதே பாவம் ;

     வேண்டாமென் றிந்நாட்டு இந்தியர்;அச் சீனர்

நேர்கொண்ட பார்வையராய் இருந்துவரு கின்றார் ;

      நினைப்பாலும் சொல்லாலும் செயலாலும் கூட !

நேர்மறையாய் *மூன்று R ஐச்* சிந்திக்கின் றாரே !

       நெஞ்சறிந்து *மூன்று R ஐப்* பற்றியின்று பேசல்

யாரென்றே எல்லார்க்கும் சத்தியமாய்த் தெரியும்

     என்பதனை அறிந்தவர்கள் யார்க்களிப்பார் வாக்கு ???

                                                                             *பாதாசன்*