சென்னை, ஆக.15- பன்னாட்டு தமிழுறவு மன்றத்தினரும் கவிதை உறவு மன்றத்தினரும் இணைந்து, பொன்விழாகண்ட “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார்கள். இவ்விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை தாங்கினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னிலை வகித்தார். விழா தொடக்கமாக தமிழ்மாமணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்றார். மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் கண்மதியன், முனைவர் அமுதா பாலகிருட்டிணன், பேராசிரியர் தமிழியலன், புலவர் சு.மதியழகன் ஆகியோர்வாழ்த்துரைத்தார்கள்.
விழா நாயகன் பத்திரிக்கை ஆசிரியர் திரு.லோகேந்திரன் அவர்கள் ஆற்றிய தனது ஏற்புரையில், “ஆரம்பகாலத்தில் கவிஞனாக இருந்துதான் பத்திரிக்கையாளனானேன்” என்று கூறினார். மனிதனின் சுயநலத்திற்குஆட்டுக்குட்டியை மேற்கோள் காட்டி எழுதிய கவிதையையும், நன்றி தெரிவித்தலுக்கு, தங்களது இனப்போராட்டத்திற்கு உதவிய இந்திராகாந்தி அம்மையார் பற்றி தான் எழுதிய கவிதையும் மேற்கோள் காட்டிபேசினார். அத்துடன் கனடா அரசு பத்திரிக்கையாளர்களுக்கு செய்திருக்கின்ற அரவணைப்பையும்உதவிகளையும் சுட்டிக்காட்டினார். “இது எனக்காக மட்டும் நடத்தப்படுகிற பாராட்ட. விழாவாக எப்போதும்நான் கருதியது இல்லை, நாம் எல்லோருக்காகவும் நடத்தப்படுகின்ற பாராட்டு விழாவாகத்தான் கருதுகிறேன்” என்று தனது உயர்ந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார்.
விழா இறுதியில் இரா.பிரகாசு அனைவருக்கும் நன்றி கூறினார்.