முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் இன்று முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் தலைமை வகித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:
இந்த ஆய்வுக்கு கூட்டத்திற்கு வருவதற்கு முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். அதற்கு, ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வுக்கூடத்தை பொறுத்தவரை, முதல்வரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத்தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்திற்குள் பதில் அளிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மனுக்களுக்கு பதில் தந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இல்லாமல் உங்கள் துறைக்கானது அல்ல என்று தெரிந்தாலும். அந்த நபருக்கு வேறு ஏதேனும் வகையிலாவது உதவலாம் என்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக ஏழை எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள் பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிக்குமாறும் உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ஏழை எளிய மக்கள் தரும் மனுக்களை வெறும் தாளாக பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி தெரிவிப்பார்கள். இதனை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உழவர் சந்தையை பொறுத்தவரை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் முழுமையாக பயன்படும் என்பதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த உழவர் சந்தை திட்டம். உழவர் சந்தை திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னும் வேகமாக உருவெடுத்து செயல்பட வேண்டும். உழவர் சந்தைக்களுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தி தந்தால் விவசாயிகளும் மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலும் உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து அங்கு உழவர் சந்தை அமைக்கப்பட வேண்டும். இவறாக அலுவலர்கள் தங்கள் துறைக்கு தேவையான இடம் தேர்வு செய்ய செல்லும் பொழுது மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு கல்விக்கும் மருத்துவத்திற்கும் தான் அதிக முக்கியத்துவம் தந்து திட்டங்களை தீட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக, பள்ளி கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியவர் நமது முதலமைச்சர் அவர்கள் தான். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு முற்போக்கு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர்களை பள்ளி கல்லூரிக்கு அழைத்து வருவது நம்முடைய பொறுப்பு என்பது உணர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நல்ல அனுபவம் உள்ளவர்கள் சிறப்பாக செயல்பட கூடியவர்கள் மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். எனவே அவர்கள் தரும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பேருந்து நிலையம், சாலைகள் என ஒவ்வொரு அரசு திட்ட பணிகளும் எப்பொழுது முடிக்க முடியும் என்று அந்தந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இன்று தெரிவித்துள்ளீர்கள். பணிகளை விரைந்து நிறைவு செய்வது எப்பொழுது என்பது குறித்த காலத்தையும் நீங்களே நிர்ணயித்து உள்ளீர்கள். நீங்கள் இந்த காலகட்டத்திற்குள் முடிப்பதாக சொன்ன நாட்களை நான் குறித்து வைத்துள்ளேன். மாவட்ட ஆட்சியர் அவர்களோடு நீங்கள் ஒன்றிணைந்து இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் சிறப்பாக செயல்படும் மாவட்டத்திற்கு பாராட்டுக்களும் தொய்வு ஏற்படும் மாவட்டங்களில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆதலால் அதனை நன்குணர்ந்து நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் இன்றைய ஆய்வின் அறிக்கை முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மிகச் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயர் பெற்று தரும்படி அரசு அலுவலக உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கரிகலவாக்கம் பகுதியில் இன்று (31.08.2023) தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை (பிரிவு-2) வரை ரூ1,540 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இச்சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் திரு.தாரேஷ் அகமது இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் திரு.கே.சங்கர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கே.ஜெயக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீபாஸ் கல்யாண் இ.கா.ப., முன்னாள் அமைச்சர்/ ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), திரு.ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), திரு.எஸ்.சந்திரன் (திருத்தணி), திரு.சுதர்சனம் (மாதவரம்), திரு.டி.ஜெ. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), திரு.க.கணபதி (மதுரவாயல்), திரு.துரை சந்திரசேகர் (பொன்னேரி) மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மரு.என்.ஒ.சுகபுத்ரா இ.ஆ.ப., ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு.தர்பகராஜ் இ.ஆ.ப, சார் ஆட்சியர் (பொன்னேரி) செல்வி.ஐஸ்வர்யா ராமநாதன் இ.ஆ.ப., ஆவடி துணை காவல் ஆணையர் திருமதி.ஜெயலட்சுமி இ.கா.ப., தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை பொறியாளர் திரு.டி. இளங்கோ, கண்காணிப்பு பொறியாளர் திரு.ஜி.தட்சிணாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.