இயக்குநர், நாவலாசிரியர், யதார்த்தமான நடைமுறை சிந்தனையாளர், யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காத போர்க்குணம் கொண்டவர் என, பன்முகத்தன்மை கொண்ட தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன‘. மனிதனின் இயல்பான குணங்களை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல் திரையில் காட்டியிருக்கிறார் தங்கர் பச்சான். வழக்கறிஞராக இருந்து தவறு செய்து, பின்பு நீதிபதியாகி ஓய்வு பெற்றபோது, செய்த தவறுக்காக மன்னிப்பு தேடி அலைகின்ற பாரதிராஜாவை திரையில் காணும்போது நம் கண்களும் கலங்குகிறது. பாரதிராஜாவுக்கு மகனாக வரும் கெளதம் மேனன், தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் பரிதவிக்கும் காட்சியில் மிளிர்கிறார். கெளதம் மேனனின் கண்களும் நடிக்கிறது. வளர்த்த பாசத்திற்காக ஏங்கும் யோகிபாபுவின் தலையில் மகுடம் சூட்ட வேண்டும். அவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.