காலம் வீணே கடத்தாமல்.


இளமைக்
.கால ஆட்சியிலே

     இருந்த போது மகாதீர்க்கே

உளத்துள் நிலைத்த மலேசியரின்

       ஒற்று மையை முதுவயதில்

களத்துப் பூவாய் அழிக்க; என்ன

     காரணம் ? அண்மைத் தேர்தலிலே

வளர்த்த கடாவே பாய்ந்ததுபோல்

     மக்கள் தந்த தோல்வியதா ?!

தோல்வி பொறுக்க முடியாமல்

      சொல்ல ஒன்றும் தோன்றாமல்

நால்விதம் சிந்தனை செய்யாமல்

      ஞாய மின்றி இந்தியரை,

ஆள்வினை கொண்ட சீனர்களை

    *அண்டி வந்த வந்தேறி*

கேளீர் உண்மை இதுவென்றே

       கிளர்ச்சி மகாதீர் செய்வதுமேன் !?

நாட்டை உயர்த்த சீனர்களை,

       நன்றாய் உழைக்கும் இந்தியரை

காட்டை அழிக்கப் பிழிந்தெடுத்துக்

    கறிவேப் பிலைபோல் எறிந்து ; பணிச்

சீட்டைக் கிழித்துத் தெருவினிலே

       திட்ட மிட்டே விட்டவர்கள்

வீட்டை விட்டே *போ* எனல்போல்

      நாட்டை விட்டே துரத்துதல்ஏன் !?

தமிழே இங்கு வேண்டாமாம் !

     தமிழும் சீனமும் வேண்டாவாம் !

உமிழ்நீ ராக இரண்டினையும்

     உமிழத் துடிக்கும் மகாதீர்க்கே

உமிழ்நீர் சளிநீர் ஆகிவிடில்

      உடலுக்(கு) ஆகாப் பலதொல்லை

செமையாய்க் கொடுத்தே தீருமென்று

     தெரியா தா ? ஒரு டாக்டருக்கே !

அரசின் சட்டம் வகுத்திட்ட

    அந்நாள் சட்ட வல்லுநர்கள்

அருமை மக்கள் தேவைகளை

      அறிந்தே சட்டம் வரைந்தளித்தார் !

அரசல் புரசல் இல்லாமல்

     அதிகா ரத்துடன் தமிழ் ,சீனம்

முறையாய்ப் பயில வாய்ப்பளித்தும்

     மூடர் போல மறுப்பதுமேன் ?

ஈரம் பட்ட தீப்பெட்டி

    இந்தியர் ; சீனர் என்றெண்ணி

ஈரம் இல்லா நெஞ்சுடனே

       இன்று வெறுத்தல் தேவையதா ?

ஈரம் கண்ட தீப்பெட்டி

      எரிக்கும் வெயிலில் காய்ந்துபின்பு

காரம் போகாக் கருமிளகாய்க்

     காட்டா தா,தன் காரத்தை ?

எதிலும் ஒன்று கூடாத

    இந்திய , சீன மாந்தர்களே ,

புதிய தொற்றாம் இனவாதப்

   புற்று நோயாம் வனத்தீயை

அதிவே கத்தில் அணைத்திடவே

      அனைவரும் ஒற்றுமைக் கடல்நீரைக்

கதியாய்க் கொணரச் செய்திடவே

     *காலம் இதனைக் கடத்தாதீர் !*

                                                 *பாதாசன்*

 

*அரும்பொருள் விளக்கம் :-*

கதியாய் : விரைவாய்