தமிழ்ப்பள்ளி மாணவர்களே !* சிறுவயதில் சேமியுங்கள்


*
இளமையிலே கல்* என்றே *ஒளவை* சொன்னார் !

       ஏனென்றால் படிப்பதெல்லாம் பதியும் *கல்போல் !*

*இளமையிலே சேர்* என்றே  நான்சொல் கின்றேன் !

         ஏனென்றால் இளமையிலே சேர்த்து வைக்கும்

வளமெல்லாம் வாழ்நாளுக் குதவும் நன்றே !

      வாழ்வதற்குக் கல்விமிகத் தேவை போல

வளமிக்க கல்வியதைப் பெறுவ தற்கே

     வளமான பெருஞ்செல்வம் தேவை ! தேவை !!

சிறுவயதில் நற்கல்வி தொடங்கும் போதே

     சேமிக்கும் வழக்கமதும் தொடங்க வேண்டும் !

சிறுவயதில் சேமிக்கும் பழக்கம் தன்னைச்

       சிறப்பாகத் தமிழ்ப்பள்ளி மாண வர்காள்

சிறியதெனச் செய்வீர் ; பின் பெருகும் என்றே

       *சிறுதுளியே பெருவெள்ளம்* ஆகும் என்று

பொறுப்போடு சிறப்பாகப் பெரியோர் சொல்லிப்

       பொருள்சேர்க்கும் முக்கியத்தை உணர்த்திச் சென்றார் !

*வழக்கறிஞர்*, முன்னாளின் அரசாங் கத்தில்

        மனிதவள அமைச்சர்; இன்று நாடாள் மன்றப்

புழக்கமுள்ள உறுப்பினராய்ச் செயல்பா டுள்ள

       புகழுறுநம் *குலசேக ரன்* இன் றொன்றை

வழக்கமென ஆக்கிவிடும் நோக்கம் கொண்டே

       *மாணவர்கள் சேமிப்புத் திட்டம்* ஒன்றைப்

பழக்கமதாய் ஆக்கியதால் அவர்க்கு நன்றி !

     பரவட்டும் இதுதமிழப் பள்ளி தோறும் !

சிற்றுண்டிச் செலவாக மாண வர்க்கே

    செல்லமுடன் பெற்றோரும் தரும்ப ணத்தை

முற்றுமாய்ச் செலவழித்தல் தவிர்த்தே அஃதில்

     முடிந்தவரை சிறுபணத்தைச் சேர்த்தே நாளும்

பற்றுவைத்து வங்கியிலே சேமிக் கின்ற

      பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்தே விட்டால்

கற்றுவரும் கல்வியொடு காசும் வங்கிக்

      கணக்கினிலே உயர்ந்திடுமே பனைம ரம்போல் !

*இருபத்து* வெள்ளிஇருந் தால்தான் *வங்கி*

      *யில்* கணக்குத் திறக்கின்ற நல்ல வாய்ப்பும்

இருக்குமெனும் விதிக்கேற்ப *மாண வர்க்கே*

     இருபதுவெள் ளியை *முதலாய்த்* தந்தி ருக்கும்

*திருகுலசே கரனார்க்கு* நான்கு பள்ளி

         சேர்ந்தவராம் *மாணவர்கள் , பெற்றோர்* தாமும்

பெருநன்றி சொல்லி,வங்கிக் கணக்கில் நாளும்

      சிறுதொகையைச் சேமித்துப் பெருகச் செய்வீர் !

                                                                       *பாதாசன்*