இருவாரங் கள்முன்னர் *ஆகஸ்ட் மாத*
இறுதியிலே *தேசியநாள்* கொண்டாட் டத்தை
அருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தோம் ; *இன்றோ*
ஆனந்த *மலேசியநாள்* கண்டோம் ; கொண்டோம் !
பெருமைமிகு *சுதந்திரநாள்* கொண்டாட் டத்தை
வருகைதந்த *மலேசியநாள்* சற்றே வெல்லும் !
இருவகைநாள் கொண்டாட்டத் துள்ளே உள்ள
எள்ளளவு வேற்றுமையும் என்ன ? சொல்வேன் !
*ஆண்டைம்பத் தேழில்* தான் *தீப கற்ப*
*மலாயாவில்* அன்றுமகிழ் சுதந்தி ரத்தை
ஆண்ட *பிரிட் டீசார்* தந்தார் ; அகண்ட நாடாய்
*ஆண்டறுபத் தின்மூன்று செப்டம் பர்,நாள்*
மாண்புபெறு *பதினாறில்* இன்றி ருக்கும்
*மலேசியா* எனும்அகண்ட நாட்டைக் கொண்டோம் !
வேண்டிதோர் மலேசியத்தில் *சிங்கை , சாபா ,*
*சராவாக்* கும் சேர்ந்தொன்றாய் ஆயிற் றாமே !
சந்ததியினர் அனைவருமே ஒன்று சேர்ந்து
பூமிபுத்ரா சலுகைகளை ஏற்றுக் கொண்டே
சந்ததமும் வேற்றுமையில் ஒற்று மையைத்
தனித்துவமாய் வாழ்க்கையிலே பழக்க மாக்கி
அந்தவொரு நாளிருந்தே மலேசி யாவில்
அன்புகொண்டே ஒற்றுமையாய் வாழும் போது
*வந்தேறி* என *மகாதீர்* கூறிக் கூறி
மலேசியரின் ஒருமைதனைச் சிதைக்கி றார் ; ஏன் ?
மகாதீரும் *மகாதீரர்* ஆக மாறி
மலேசியத்தின் கொள்கையையே சிதைக்கும் நோக்கில்
தகாதபொய் பலசொல்லி நாளெல் லாமும்
தனைமறந்து வந்தேறி என்றே கூறி
*மெகா* முறையில் பலவழியில் பேசிப் பேசி
வெள்ளோட்டம் பார்க்கின்றார் ! கொடுமை ! *எண்ணெய்*
புகாயிடத்துப் புகல்போன்று புகுந்து நம்மைப்
போகாத இடம்போகச் சொல்கின் றாரே !
*பாதாசன்*