அறுக்கமாட் டாதவனின் இடுப்பைச் சுற்றி
அறுபத்தெட்(டு) அரிவாளாம் என்ப தைப்போல்,
இருக்கமாட் டாதவனின் வீட்டில் எங்கும்
ஏராள இருக்கைகள் இருப்ப தைப்போல்
இருக்கின்ற *மிகக்குறைந்த இந்தி யர்க்குள்*
இயங்குகின்ற *பலகட்சி போதா* என்றே
வருகிறதாம் மேன்மேலும் *புதிய மூன்று*
அரசியல்சார் *கட்சிகளாம்* ஐயோ… ! ஐயோ…!
தோன்றுகிற அக்கட்சி மூன்றுக் குள்ளும்
தோன்றிவிட்ட *கொள்கைகளும் மூன்றாம்* , கேளீர் !
ஊன்றுகிறார் *ஒற்றுமைசார் அரசாங் கத்தின்*
*உறவை* ஒரு கட்சியினர் ; மற்றோர் கட்சி
தாண்டுவராம் *தேசியக்கூட் டணிக்குள்* மூழ்க !
தனித்திருக்கும் மூன்றாவ தான கட்சி
*வேண்டுதல் ; வேண் டாமை* இலா நோக்கத் தோடு
மேவும் *இரு தலைக்கொள்ளி* எறும்பைப் போன்றாம் !
இவ்விதமாய் இந்தியர்க்குள் அதிக கட்சி
இருக்குமெனில் எந்தவொரு கட்சிக் கேனும்
பவ்வியமாய்த் தொண்டுசெயத் *தொண்ட ரின்றிப்*
பலநிலைசார் *தலைவர்களே இருப்பார்* உண்மை !
அவ்விதமாய் ஆகிவிட்டால் மேடை தோறும்
ஆளிருப்பார் ; அவர்களது பேச்சைக் கேட்க
எவ்விதத்தும் ஆளிருக்க மாட்டார் , மாட்டார் !!
இந்தியரே பின்விளைவை யோசிப் பீரே !
*பிரித்தாளும்* கொள்கையினை ஆங்கி லேயர்
பெரும்அளவில் *தாம்ஆண்ட* மக்கள் நெஞ்சில்
இருத்திவைத்தார் என்பார்கள் ; அதனைப் போன்றே
இந்தியர்க்குள் மட்டுமின்றித் தமிழர்க் குள்ளும்
பிரித்தாளும் கொள்கைதனை *நமக்குள் நாமே*
பெரிதாக வளர்க்கின்றோம் *பதவிப் பித்தால் !*
சரிதானா, இந்தவழி ? பிரிவை நாமே
தான்வளர்த்தால் நலம்தருமா ? சிந்திப் பீரே ?
*பாதாசன்*