*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த*
*வகுத்தலும் வல்லது அரசு* (குறள் 384)
தேனிருக்கும் இடமெல்லாம் தேனை ஈட்டித்
தேன்கூட்டில் சேர்ப்பதுடன் காத்து வைக்கும்
தேனிகளைப் போல்,*வருவாய் வருமி டத்தைத்*
தெளிவாக ஆய்ந்தறிந்து பொருளை நாளும்
வானளவு சேர்த்துவைத்துப் பாது காத்து
வரும்பொருள்கள் அனைத்தினையும் மக்கட் காக
ஆனவரை முறையாகச் செலவு செய்தால்
அதுதானே *நல்லாட்சி இலக்க ணந்தான் !*
மேற்கண்ட பொருளமைந்த *குறளைத்* தானே
மேன்மைமிகு *பிரதமராம் அன்வார்* தாமும்
மேற்கோளாய் *நாடாளு மன்றம்* தன்னில்
வெளிப்படையாய்க் கூறியது மட்டு மின்றி
மேற்கொண்ட கொள்கையிதே என்றே காட்டும்
மிகச்சிறந்த *நிதியறிக்கை* சமர்ப்பித் துள்ளார் !
நாற்றிசைகள் மட்டுமல்ல ; திசைகள் எட்டும்
நல்லாட்சிக் கே,குறளை நயமாய்ச் சொன்னார் !
வள்ளுவர்தம் *இறைமாட்சிக்* கொள்கை தம்மை
*மலேசியா* மட்டுமன்றி உலக மெல்லாம்
உள்ளபல நாடெல்லாம் கடைப்பி டித்தால்
ஒழுங்கான ; *ஊழலற்ற* ஆட்சி எங்கும்
நல்லபடி நடப்பதுவும் சாத்தி யந்தான் !
நாமறிந்த இக்குறளைப் *பிரத மர்க்கே*
உள்ளபடி எடுத்துரைத்தார் யாரோ ,அன்னார்க்(கு)
உரத்தேநாம் சொல்வோமே வாழ்த்துச் சேதி !
*இறைமாட்சி* அதிகாரம் கொண்டி ருக்கும்
இனிய *பத்துக் குறளிலுள* கருத்துக் கேற்ப
*கறையில்லா* இறையாட்சி நடப்ப தற்கே
கைகொடுத்தால் மக்களெலாம் , மலேசி யாவில்
முறையாட்சி மேலோங்கும் ; மகிழ்ச்சி பொங்கும் !
முறைகேடும் வறுமையதும் வெறுமை யாகும் !
மறைநூலாம் *திருக்குறளின்* வாழ்வைக் கொண்டால்
வனமலர்கள் போல்நாடும் மணக்கும் கண்டீர் !
*பாதாசன்*