வாக்காளர் இந்தியர்க்காய் வருந்துகிறோம் நாளும்
வடிக்கின்றோம் கண்ணீரைக் கடலளவில் பாரும் !
வாக்களிக்கும் நாள்மட்டும் மன்னரைப்போல் நாட்டில்
மதித்திடவே படுகின்றார் ;பின்ஆண்டாம் ஐந்தில்
போக்கற்றோர் என்றாள்வோர் பலரொதுக்கி வைப்பார் !
போன – ஐந்தே ஆண்டுகளின் பின்தேர்தல் வந்தால்
வாக்காள இந்தியர்கள் ஒருநாள்மன் னர்போல்
மதித்தமறு நாள்முதலாய் அனாதையென ஆவார் !
எக்கட்சிக் கூட்டணியும் ஆண்டாலும் இங்கே
இந்தியர்கள் வாக்களிக்கும் தேர்தல்நாள்மட்டும்
எக்களிப்பில் இருந்திடுவார் ; ஓருநாள் பின்னே
எவராலும் சீந்தாத மை–இல்– கோல் ஆவார் !
கெக்கலிப்போம் *நம்வாக்கால் வெற்றிபெற்றார்* என்றே !
கெக்கலிக்கும் *வென்றவரோ அதைசொல்ல* மாட்டார் !
இக் *கருமம்* அறுபத்தா றாண்டுகளாய்த் தொடரும் ;
இதுதானே வாக்காள இந்தியர்தம் *வக்கு !*
இந்தியர்தம் *பிறப்பதுவும்* இன்றுகுறைந் திருந்தும்
இங்குபலர் *தலைவர்களாய்* ஆகிடவே எண்ணி
முந்திநிற்போர் பட்டியலோ நாள்தோறும் நீளும் !
முன்னோக்கம் இல்லாமல் கட்சிபல தொடங்கிப்
பிந்திநிற்கத் தனக்குத் – தான் *சூனியம்* வைத் தாற்போல்
பிழைசெய்யும் *தலைவர்பலர் பின்போகும்* நம்மின்
இந்தியர்தம் வாக்குகளால் எவர்க்கேனும் வெற்றி
எதிர்நாளில் கிடைத்திடுமா ? *யோசிப்பீர் நன்றே !*
இவ்வாண்டு *மாநிலங்கள் ஆறு* அவற்றின் தேர்தல்
இந்தியர்க்கே என்னசொல்லித் தந்ததுவாம் ; அவர்தம்
செவ்வைமிகு வாக்குகளில் பெரும்பான்மை *மதத்தைச்*
செப்பிநின்ற *கூட்டணிக்கே* போனதெனச் சொல்வார் !
எவ்விதத்துச் சிந்தனையால் *மதம்தானே மூச்சாம்*
என்பார்க்கே இந்தியர்கள் வாக்களித்தார் ? இஃதைப்
பவ்வியமாய் ஆய்ந்தார்க்கே பதறியதே நெஞ்சு ;
*பாதகத்தை இந்தியர்கள் செய்துவிட்டார்* என்றே !
*புலி* க்குத்தான் தப்பியந்த *முதலையதன்* வாயில்
புகுவதற்கே ஒப்பானார் ; பிறகட்சி விட்டே
வலியரெனத் தமைநினைக்கும் *தேசியக்கூட் டணிக்கே*
வாக்களித்தால் என்நடக்கும் ? என்பதனை நம்மோர்
தெளிவாகப் புரிந்துகொள்ள வில்லயெனில் *ஓர்நாள்*
*திக்கற்றோர்* போல்இந்தி யர்களிங்கே ஆதல்
எளிதாகும் என்றின்றே எச்சரிக்கை செய்தோம் !
நம்பியவாக் காளர்தமை நட்டாற்றில் விட்டே
நாங்களென்ன செய்வதுவாம் எனக்கேட்கும் தலைவர்
வெம்பிநிற்கும் இந்தியர்தம் நொந்தநிலை கண்டும்
வேதனையே கொள்ளார் ; வேண் டுவனவும் செய்யார் !
கம்பிஎண்ணிச் சிறையிலுளக் குற்றமற்றார் போலக்
கதறும்நம் வாக்காளர்க்(கு) யார்பதில்சொல் வாரோ ?
எம்பிஎம்பித் தலைவர்பலர் *நெட்டையராய்* இருந்தும்
எதும்செய்யார் ; *குள்ளர்வாக் காளரென்ன செய்வார் ?*
*பாதாசன்*
அரும்பொருள் விளக்கம் :-
1.எக்களிப்பு :*மகிழ்ச்சி*
2.சீந்தாமல் : *விரும்பாமல்*
3 மை– இல்–கோல் : *மையில்லா எழுதுகோல்*