நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி, தேலனாங்குறிச்சி பகுதிகளில் விசைத்தறிப் பட்டறைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி உரிமையாளர்களின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறார்கள். தோக்கவாடியில் ரைஸ் மில் செல்வம் என்பவரது விசைத்தறி பட்டறையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதை கண்டறிந்த ஏஐடியூசி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுத்து கடந்த 26.06.2020ஆம் தேதி முற்பகலில் வருவாய் கோட்ட அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, “விசைத்தறி கூடத்தில் உள்ள தொழிலாளர்களின் உடமைகளை போய் எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் தடுக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் முன்னணி தலைவர் என்.செல்வராஜ் மற்றும் தங்கராஜு ஆகியோர் தோக்கவாடி ரைஸ்மில் செல்வம் பட்டறைக்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த செல்வம் மற்றும் சிலர் விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர் நாமக்கல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கண்ணாடி செல்லப்பன் என்று தெரியவருகிறது. தாக்குதல் குறித்து தொழிற்சங்க தரப்பில் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை புகார் கொடுத்தவர்கள் மீது குற்றத்தை திருப்பி விட்டு, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசைத்தறி உரிமையாளர் ரைஸ்மில் செல்வம், கண்ணாடி செல்லப்பன் உள்ளிட்டோரை காப்பாற்றும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. காவல்துறை நடவடிக்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பத்திற்கு அதிகார மையத்தின் செல்வாக்கு மிக்க ‘பிரமுகர்‘ தலையீடு தான் காரணம் என புகார் எழுந்துள்ளது.
காவல்துறை நிர்வாகத்தில் சட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து வருவதை கட்டுப்படுத்த இயலாத கையறு நிலையில் முதலமைச்சர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள கெடு வாய்ப்பாகும். காவல்துறையின் அத்துமீறல்களை தடுக்க உள்துறை நிர்வாகம், தமிழ்நாடு காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தோக்கவாடி ரைஸ்மில் செல்வம், கண்ணாடி செல்லப்பன் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. என்றும், அதைத்தொடர்ந்து
சாத்தான்குளம் காவல்துறையின் இரட்டை படுகொலை வழக்கில் தொடர்புடைய ‘குற்றவாளிகள்’ யார் யார் என்பது உலகறிந்த செய்தியாகிவிட்டது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அலுவலர்கள் உட்பட இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக கொடூரக் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், இரத்தம் வடியும் நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்ட நீதித்துறை நடுவர், நொருங்கிய உடலோடு சார்பு சிறையில் அடைத்த கோவில்பட்டி சார்பு சிறை அதிகாரிகள் என அனைவரும் இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு உடைந்தைய செயல்பட்டிருப்பவர்கள் என்பதை தமிழ்நாடு அரசு மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் படுகொலை தொடர்புடையோர் அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கண்காணித்து வரும் உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நேர்மையான அதிகாரிகள் விசாரணை நடத்தினால் போதுமானது என்ற நிலையில், முதலமைச்சர் அவசர அவசரமாக வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது விசாரணையை தாமதப்படுத்தி, குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் முயற்சி என ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.