தீவாம் *பினாங்கில்* இந்தியருள்
தினமும் பெரும்பா லானவர்கள்
*சேவா* கட்ட முடியாமல்
திணறிக் கொண்டே அழுகின்றார் !
சாவா திருக்க வேண்டி,அவர்
சாப்பா டின்றித் தவிப்பதனைக்
கூவாச் சேவல் போல்நாளும்
குமுறு கின்றார் உள்ளத்துள் !
*பட்டினி* கிடத்தல் ஒருபக்கம் !
*படிக்க* வாய்ப்பிலை மறுபக்கம் !
சட்டென இவற்றைத் தீர்ப்பதற்கே
தலைவர்கள் எவரும் வரவிலையாம் !
கெட்டித் தனமாய் வாக்குகளும்
கிடைப்ப தற்காய் முன்வருவோர்
பட்டினிப் பிள்ளைகள் பசிபோக்க
பக்கம் வரவே பார்க்கலையாம் !
தீர்வை இல்லாத் தீவாகத்
தெரிந்தோர் பினாங்கைச் சொல்வார்கள் !
ஆர்வத் துடனே அந்நாளில்
ஆங்கே சென்று பொருள்வாங்கப்
பார்த்த வர்களுள் நானொருவன் !
பகர்கின் றாரே இன்(று) ஐயோ
தீர்த்தே குறையை மக்களுக்கே
தினமும் மகிழ்ச்சி தருவர்,இலை !
இருப தாவது நூற்றாண்டில்
இந்தியர் இங்கே வாழ்ந்தநிலை
இருபத் தோராம் நூற்றாண்டில்
இன்னும் தொடர்வதைப் பார்த்திடவே
இருண்டே கண்கள் இரண்டிலுமே
இரத்தம் வடியப் பார்க்கிறதே !
*கருவா யி* ருந்து வெளிவந்த
காலத் திருந்தே கதி,இதுவா ?
வாக்குப் போடப் போகுமுனே
வறுமை எதுவும் நெருங்கவிடா
வாக்குக் கேட்போர் செயல்திறனை
மனத்துள் நன்றாய் ஆய்ந்தபினே
வாக்கைப் போடும் இந்தியர்காள்
மகிழ்ந்தே நல்லார்க்(கு) அளித்திடும்நல்
நோக்கம் நெஞ்சில் வைத்துவிட்டால்
நூறு துயரமும் தீர்ந்திடுமே !
*பாதாசன்*
*அருஞ்சொல் விளக்கம் :-*
1.சேவா ( மலாய்) : வாடகை
2தீர்வை இல்லா : வரி இல்லாத