தமிழ்வாழ்த்தைப் பாடுதற்குத் தமிழப் பள்ளி
*தடைவிதித்த* ஆத்திரத்தைத் தீர்க்கத் தானே
தமிழ்வாழ்த்தைத் தமிழ்ப்பள்ளி மாண வர்கள்
தவறாமல் மறவாமல் பாடு தற்கே
அமைவான முயற்சிகளைச் செய்வோம் என்றே
அறிவித்தார் *பாண்டியனார்* அவர்தான் *நம் – த*
*லைமையா சிரியர்மன் றத்த லைவர் !*
தமிழரெல்லாம் அவருக்கே நன்றி சொல்வோம் !
ஆளுக்கோர் தமிழ்வாழ்த்து ; இயக்கத் திற்காய்
ஆனதொரு தமிழ்வாழ்த்து என்னும் நோக்கில்
நாளுக்கோர் தமிழ்வாழ்த்து என்றில் லாமல்
நம்நாட்டுக் கேற்றபடி *சீனி நைனா*
ஆளுமையாய் எழுதிவைத்த *தமிழ்த்தாய் வாழ்த்தை*
அந்நாளில் *எழுத்தாளர் சங்கம்* ஏற்றுத்
தாளமுடன் இராகமுடன் இசையும் கூட்டித்
தந்துள்ளார் ; அதைச்சிலரே ஏற்றி ருந்தார் !
ஒற்றுமையே விலையென்ன என்றே கேட்கும்
ஒண்டமிழர் *தமிழ்வாழ்த்தி லேனும் ஒன்று*
*பட்டிடவே* வேண்டுமென்று தமிழப் பள்ளி
பயில்கின்ற மாணவர்கள் எல்லா ருந்தான்
கற்றந்தத் தமிழ்வாழ்த்தைப் பாட வேண்டும்
கண்டிப்பாய் எனநினைத்துப் *பாண்டி யன்* தான்
சட்டத்தைப் போட்டதுபோல் சொன்ன சொல்லைத்
தவறாமல் ஒப்பட்டும் தமிழப் பள்ளி !
*நான்படித்த தமிழ்ப்பள்ளி காஜாங் பள்ளி*
நல்லபடி *சீனிநைனா* தமிழ்வாழ்த் தையே
தேன்குடித்த வண்டைப்போல் மகிழ்வாய் ஏற்றுத்
தெளிவாக, அழகாக , இனிமை யாக
வான்கலந்த வாசகமாய் எண்ணிப் பாடி
வரலாற்றைப் படைத்துள்ளார் ! வாழ்க ,வாழ்க !
ஏன்,அதனை ஏற்பதுவாம் ? என்று கேட்டே
எள்ளாமல் நாடளவில் செயலாக் குங்கள் !
மலேசியத்துத் தமிழர்களின் தமிழ்வாழ்த் தாக
மனப்பூர்வ மாயிதனை ஏற்றுக் கொண்டு
மலேசியத்துத் தமிழ்ப்பள்ளி *மாண வர்கள்*
மனமுருகப் பாடிவந்தால் எதிர்கா லத்தில்
*மலேசியத்துத் தமிழ்வாழ்த்தே* இதுதான் என்று
*மன்பதையார்* அனைவருமே சொல்லிச் சொல்லி
மலேசியத்துத் தமிழர்களின் அடையா ளத்தை
வானளவுக்(கு) எடுத்துரைப்பார் ! உண்மை ! உண்மை !!
*பாதாசன்*
*அருஞ்சொல் விளக்கம்*
மன்பதையார் : உலகத்தார்