*திரைப்பட ரமணா போல்* *நம் ரமணன் செய்வாரா ?*


இந்தியரின்
மேம்பாட்டுத் திட்டத்தின் கீழாய்

       இருக்கின்ற *தொழில்முனைவர்* நிதிக்கான தொகையை

முந்தியதை விடவுமின்னும் அதிகரிக்கு மாறு

       முறையிட்டே *துணையமைச்சர்* *ரமணனுமே*, அரசைச்

சிந்திக்கக் கேட்டுள்ளார் ! அவர்முயற்சி வெல்க !

      சீராகத் தொழில்முனைவர் முயற்சியெலாம் முடிய

வந்ததொகை குறைவென்றால் அவர்களென்ன செய்வர் ?

      வழிகாட்ட அவர்விடுத்த கோரிக்கை சரியே !

கோரிக்கை சரியென்ற போதினிலும் அந்தக்

      கூடுதலாய் வரும்நிதியும் உரியவர்க்கே சேர

யாரிதற்குப் பொறுப்பேற்பார் என்பதுதான் ஐயம் ?

     இதுவரைக்கும் *தெக்குன்* எனும் திட்டத்தின் நிதியும்

நேரியதோர் முறையினிலே சேரவில்லை என்னும்

      நினைவினிலே இருந்தின்னும் இந்தியருள் பல்லோர்

வீரியமாய் மீளவில்லை ! இதைநினைவில் வைத்து

      வினையாற்றத் *தெக்குன்* முற் பட்டாலே போதும் !

தெக்குனிலே பணம்பெற்ற தொழில்முனைவர் நன்றாய்ச்

        செயல்பட்டே  தம்தொழிலில் முன்னேறி னாரா ;

சிக்கல்களுக்(கு) உடனடியாய் நல்லபல தீர்வைத்

       தெளிவாகக் கண்டுளரா என்பதையும் நன்கு

தெக்குன்சார் அதிகாரி தெரிந்திட்டால் தானே

        திட்டமதால் இந்தியர்கள் பெற்றபயன் யாவும்

தக்கபடி அறியவரும் ; அறிந்தபினே யாரும்

      தெக்குனையே தவறுசொல்ல வாய்ப்பின்றிப் போகும் !

அண்மையிலே பேர்,*ரமணா* தமிழ்ப்படத்தைப் பார்த்த

       அந்தநினை வோடுடனே நம் *ரமணா* செயலும்

கண்வழியாய்க் கருத்துக்குள் நுழைந்திட்ட போது

       கணப்பொழுதில் ஓரெண்ணம் தோன்றிட்டே மனத்தில் !

திண்மையுடன் சமுதாய நலனுக்காய் அந்தத்

      திரைபடத்து நாயகனாம் ரமணாவைப் போன்று

கண்ணெதிரே தெரியும்நம் *ரமணா* வின் செயலைக்

     கண்டால்நம்  இந்தியர்கள் பொருள்வளமும் வெல்லும் !

                                                                           *பாதாசன்*