அரசாங்கம் வகுத்துள்ள
*அருங்கல்வித் திட்டத்தைப்*
புரியாமல் பலபெற்றோர் ;
புரிந்துகொள்ள முயலாமல்
அறியாமை காரணத்தால்
*அவசரத்தில் இன்றுவரை*
தெரியாமல் புரியாமல்
தெரிந்தெடுத்தார் *பிழைமுடிவை !*
*ஆயிரத்துத் தொளாயிரத்(து)*
*ஐம்பத்தா றாம்ஆண்டில்*
பாயிரமாய் வந்தபுதுப்
படிப்புக்கோர் திட்டமதில்
தாய்மொழியின் பள்ளிகளில்
தம்மொழியைப் படித்தவர்க்கு
வாய்ப்பளித்தார் *இடைநிலையில்*
தாய்மொழியைப் படிப்பதற்கே !
*நாடாறு மாதங்கள்*
நல்லாட்சி நடத்திவிட்டுக்
*காடாறு மாதங்கள்*
கட்டாய வாசமென்று
நாடாள் *விக் கிரமாதித்*
*தன்* கதையும் , தமிழ்ப்பள்ளி
வீடாளும் தமிழ்ப்பிள்ளை
மேவுகதை யும்ஒன்றே !
*ஆறாண்டு தமிழ்ப்பள்ளி*;
*ஆறாண்டும் இடைப்பள்ளி*
ஆறாண்டு *தமிழ்படிக்கும்*
அவ்வேளை கட்டாயம்
மாறாமல் *ஆங்கிலத்தை*
*மலாய்மொழியைக்* கற்கையிலே
ஏறாமல் போய்விடுமா
*இருமொழிகள்* தமிழ்ச்சேய்க்கே ?
தமிழ்ப்பள்ளி தனில் *ஆறே*
*ஆண்டுகளில்* தமிழ்படித்த
தமிழ்ச்சேயர் *இடைநிலையில்*
*தமிழில் ஒரு பாடத்தைச்*
*சுமையென்றே நினைப்பதுதான்*
*சுத்தமடத் தனமன்றோ !?*…
*பாதாசன்*