எந்தவொரு பொருள்விலையின் *ஏற்றத் திற்கும்*
எத்தனையோ காரணங்கள் சொல்கின் றார்கள் !
அந்தவொரு *காரணங்கள் தொகுப்பில்* உள்ள
அத்தனையும் உண்மைகளே எனக்கொண் டாலும்
முந்தி,அந்தக் காரணத்துள் *வருமா னத்தை*
முன்னிறுத்தும் திட்டமெதும் இல்லை என்றால்
சிந்திப்பீர் பொருள்விலைகள் ஏற்றத் தாலே
*செலவதிகம் ; குறைவருவாய்*. இதுதான் உண்மை !
ஏறுகிற விலைவாசிக் கேற்ப மக்கள்
எல்லார்க்கும் வருமானம் பெருகா விட்டால்
மாறுதற்கு வழியுண்டா ? ஏழை மாந்தர்
வாழ்வுயர வகையுண்டா ? அரசாங் கத்தார்
ஆறுதலைத்,தேறுதலை சொன்னால் மட்டும்
அடிமட்ட மக்கள்நிலை மாறும் என்று
கூறுவதால் என்னபயன் விளையும் ? சற்றே
கூர்த்தமதி யால்,அரசு ஆய்தல் வேண்டும் !
*அரிசி* முதல் குடிக்கின்ற *நீர்* வ ரைக்கும்
அதிரடியாய் விலையேறின் *ஏழை வாழ்வு*
*தரிசுநில* மாயன்றோ மாற நேரும் ;
தரித்திரப்பேய் பிடித்தாட்டும் ; ஐயோ ! அம்மா… !
கரிசனமும் மிகவைத்தே ஆட்சி யாளர்
கண்டிப்பாய் விலைவாசி உயர்வுக் கேற்ப
வருமானம் உயர்வதற்கும் வழிசெய் திட்டே
வறியவர்க்குப் *பால்வேண்டாம் ; நீர்வார்ப் பீரே !*
செலவுயர்வைத் தடுப்பதற்கு முடியா தென்றால்
வரவுயர வழிசெய்வீர் ; இயலா தென்றால்
நிலைகுலைந்தே போய்விடுவர் நாட்டு மக்கள் ;
நினைக்கையிலே நெஞ்சுபஞ்சு நெருப்பாய்த் தீயும் !
அலைகடலில் தத்தளிக்கும் துரும்பைப் போன்றே
அல்லாடும் மக்களென்று அமைதி காண்பார் !
உலைவைக்கும் *அரிசிவிலை* உலைநீர்க் கான
விலையுயர்வால் ஏழையென்ன செய்வார் ? பாவம் !
*பாதாசன்*