சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிசிஐடி 12 குழுக்களாக விசாரித்ததில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகு கணேஷ், காவலர் முத்துராஜ், காவலர் முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம்தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பதவியேற்றார். பதவியேற்றவுடன் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை.
மற்றவர்கள் சென்றுள்ளனர். இதில் மற்றவர்களை அனுப்பிவிட்டு எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜி, உயிரிழந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக அவரது வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில்தான் எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோரும் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.