“பயனற்ற உணர்வுகளைத் தூண்டச் செய்யும்
பல்வேறு பிரச்சினைகள் குறித்தே யாரும்
நயமற்றுப் பேசிடவே வேண்டாம்” என்று
நம்முடைய இந்தியர்க்கே சொல்லி யுள்ளார் ;
வயப்பட்ட மனத்துடனே *அன்வர்* ; கேட்டோம் !
மாண்புமிகு பிரதமராம் அன்வ ரோடு
தயவுடனே மிகப்பலரும் அவர்க ருத்தைத்
தாராள மாய்ச்சொல்ல முனைவர் ; உண்மை !
இந்தியர்கள் மட்டும்தான் உணர்வைத் தூண்டும்
எத்தனையோ பிரச்சினையை எடுத்துச் சொல்ல
முந்திநிற்க முனைகின்றார் என்ப தைப்போல்
முடிவுரைக்கும் கருத்தையவர் உரையில் கண்டோம் !
இந்தியரா *வந்தேறி* என்றே மற்ற
இனத்தவரைப் *பழிக்கின்றார் ?*; நாட்டுப் பற்றே
இந்தியர்க்கே *இல்லையென்று சொல்ப வர்யார் ?*
இவையெல்லாம் பிரதமர்க்குத் தெரியா தாமோ ?
*இனவாதம், மதவாதம்* பேசிப் பேசி
எத்தனையோ பொதுநிகழ்வில் அவற்றைக் காட்டி
மனவாதம் கொள்பவர்யார் ? அவற்றைக் கண்டும்
வயிறெரிந்தும் மனம்சகித்துப் பொறுமை காத்துத்
தினம்வாதம் செய்யாமல் வாயை மூடிச்
சீரழியும் இந்தியரா உணர்வைத் தூண்டும் ;
கனல்கக்கும் ; அனல்பறக்கும் பிரச்சி னையைக்
காலமெலாம் பேசுகிறார் ? அல்ல, அல்ல !
பழிவேறு பக்கமெனில் பாவம் வேறு
பக்கமெனல் போல்நாட்டில் யார்யார் எல்லாம்
பழிப்புரையை ; இழிப்புரையை ; இடித்து ரையைப்
பலகாலம் பேசுகையில் பாவ மெல்லாம்
வழிவழியாய் இந்தியர்க்கே சேர்வ தென்ன
மாயமென்றே யாருக்கும் தெரிய வில்லை !
விழிபிதுங்கி நிற்கின்ற இந்தி யர்தம்
வேதனையைப் பிரதமரும் புரிதல் நன்றே !
*பாதாசன்*