*உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டால்…? என்ன… சொல்ல…!*


அகிலமெலாம்
ஏற்கெனவே பரவி யுள்ள

     *அருமைச்செம் மொழி* தமிழைக் கல்வி மூலம்

அகிலாக மணப்பதற்கு வழியைத் தேடும்

      அனைத்துலகத் *தமிழாசான் மாநா டொன்று*

இகத்தினிலே உள்ளவொரு *கனடா* நாட்டில்

     ஈர்ப்புடனே *பதினைந்தாம்* தடவை யாக

மிகச்சிறப்பாய் நடைபெறவே இருப்ப தாக

      விருப்பமுறு செய்தியைநா ளிதழில் கண்டோம் !

*தகவல்யுகக் கணினிவழித் தொழில்நுட் பத்தால்*

       தமிழைவளர்க் கின்றவகை அனைத்தும் ஆய்ந்தே

தகவுடனே உலகமெலாம் *தமிழ்சார் கல்வித்*

      *தரத்தினையே* உயர்த்துகிற நோக்கம் கொண்ட

அகவுணர்வில் தமிழாசி ரியர்மா நாட்டை

      அருமையுடன் பெருமையுடன் *நடத்து வோரே*,

*நகம்சதையின்* உறவாகத் தமிழும் அஃதின்

        நலம்பேணும் தமிழர்களும் உளரா சொல்க !

தமிழாலே *பிழைக்கின்ற* தமிழா சானுள்

     சரிபாதிப் பேர்களுமே *தம்பிள் ளையைத்*  *

தமிழ்ப்பள்ளிக்(கு) அனுப்புவதே இல்லை ; ஆனால்,

    தமிழ்வளர்க்க வாழ்நாளை ஈகம் செய்யும்

தமிழர்களே நாங்களென அவர்கள் சொல்வர் !

      தமிழாசி ரியர்கள்மா நாட்டைக் கூட்டும்

தமிழர்களே, *தமிழாசி ரியர்தம் பிள்ளை*

      தமிழ்ப்பள்ளி செல்லவழி யைக் *காண் பீரே !*

தமிழ்படிக்கப் பிள்ளைகளே இல்லை யாயின்

     தமிழாசி ரியர்க்கிங்கே *உண்டா வேலை ?*

தமிழ்ப்பள்ளி களுக்குத்தான் *என்ன தேவை ?*

     தமிழ்க்கல்விக் கென்று *மா நாடா வேண்டும் ?*

தமிழர்களின் தலைவர்பலர் பிள்ளை யுந்தான்

      தமிழ்ப்பள்ளி செல்வதில்லை என்னும் போது

தமிழ்காத்தல் தங்கள்பணி என்றே கூறும்

     தமிழர்களால்மாநாட்டால்…?  *என்ன சொல்ல…!*

                                                                          *பாதாசன்*