இடைநிலைசார் பள்ளிகளில் *தமிழ்கற்றுத் தந்தோர்*
இறுதியிலே பணிஓய்வு பெற்றுவிட்ட பின்பும்
இடைநிலைசார் பள்ளிகளில் தமிழ்கற்றுத் தரவே
எப்படியோ அனுமதியை முதல்வரிடம் பெற்றே
நடைமுறையில் புதியவர்தம் நல்வாய்ப்புத் தடுத்தே
நங்கூரம் போடுவதாய் வந்துள்ள சேதி
முடைநாற்றம் ஆகியதே ; *தமிழர்க்கே தமிழர்*
முடக்கத்தை ஏற்படுத்தல் ஞாயமல்ல கேளீர் !
இனத்தாரின் புதுவாய்ப்பை இனத்தாரே கெடுத்தால்
எதற்காகும் தமிழ்ப்பட்ட தாரிகளின் வாழ்க்கை ?
மெனக்கெட்டே *உப்சியிலே* சேர்ந்துதமிழ்ப் பட்ட
மேல்படிப்பைக் கற்றவர்கள் கதியென்ன ஆகும் ?
தனக்குமட்டும் பணம்வேண்டும் என்றோய்வு பெற்ற
தமிழ்ப்பட்ட தாரிகளே , வாழ்நாளில் முற்றாய்க்
கணக்கிட்டு நீங்களெலாம் நினைப்பதிலே யாரும்
காணாராம் குறை,அதற்குக் காரணமும் உண்டாம் !
தொழில்வாய்ப்பை அவர்நாடல் தப்பில்லை ; ஆனால்,
தொழில்கொடுக்கும் பள்ளிமுதல் வர்கள்செய் தப்பு !
தொழில்வாய்ப்பை ஓய்வுபெற்ற ஆசிரியர்கட்(கு) ஈந்தால்
தொடர்ந்துதமிழ் கற்றிடவே *உப்சியிலே* என்றும்
வழியின்றிப் போய்விடுமே ; தமிழ்மொழியைக் கற்க
வருவோரும்,தமிழ்கற்றுத் தருவோரும்… ஐயோ
விழிபிதுங்கி நிற்பதற்கே முதல்வர்களுள் பலரும்
வேண்டுமென்றே இத்தவற்றைச் செய்கின்றார் அடச்…சே…!
முதல்வரிடம் மறுவாய்ப்பைக் கோருவதும் தப்பு ;
முதல்வர்களும் அவர்களுக்குப் பணிதருதல் *தீப்பு !*
முதல்வரொன்றும் பொதுசேவை இயக்குநரும் அல்லர் !
முறைகேடாய்ப் பணிஓய்வு பெற்றவரை மீண்டும்
சதிசெய்தே பணியமர்த்தம் முதல்வர்சிலர் செய்யின்,
சதிக்குடந்தை ஆகிடுவார் பணிஓய்வைப்பெற்றோர் !
சதிவேண்டாம் *உப்சி* யதன் *தமிழ்ப்பட்ட தாரி*
தமிழ்கற்றுக் கொடுக்கட்டும் இடைநிலைப்பள் ளிகளில் !
*பாதாசன்*
அருஞ்சொல் விளக்கம் : தீப்பு (மலாய் : ஏமாற்றுதல்)