*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?*

பன்னாட்டுத் தாய்மொழிநாள் என்றே * . நா*

       பாரறியப் பரந்துரையைச் செய்த நன்னாள் !

என்னாட்டில் எந்தாயின் தமிழை நாளும்

     எழுச்சிபெறச் செய்முயற்சி அனைத்தும் இன்றே

எந்நாட்டி லும்காணோம் ! என்றா லும்தான்

       இன்றமிழ்த்தாய் மொழிநாளை மகிழ்ச்சி யோடு

நன்றாகக் கொண்டாடு கின்றோம் நாங்கள்

     ஞாலத்துத் தமிழுறவுக் குழுமத் தோடு !

தாய்மொழிநாள் கொண்டாட்டம் ஓர்நாள் தானா ?

    தாய்மொழியை நினைக்கவொரு நாளா போதும் ?

தாய்மொழியும் நம்குருதி நரம்பி லெல்லாம்

      தாய்ப்பாலாய் ஓடுகிற போது நாளும்

தாய்த்தமிழை நொடிக்குநொடி நினைக்கா தோரைத்

      தமிழரெனச் சொல்வதிலே பொருளே இல்லை !

வாய்மொழியாய்க் கூட ,தமிழ் பேசு தற்கும்

     வக்கில்லார் எவ்வகையில் தமிழர் ? சொல்க !

*உலகமொழி , நாட்டுமொழி* மட்டு மன்றி

      *ஊர்மொழியாய் வீட்டுமொழி யாய்* நம் நெஞ்சுள்

உலவுமொழி யாய்த் *தமிழும்* இருந்தால் தானே

      உலகத்தார் தமிழைச்செம் மொழிதான் என்று

பலமாக ஒப்பிடுவர் ; ஆனால் நாமோ

      பச்சடிபோல் தமிழ்மொழியை ஊறு காய்போல்

சிலசமயம் பயன்படுத்திக் கொண்டால் என்றோ

    செம்மொழியாய் உலகில்தமிழ் செழிக்கும் ? சொல்வீர் !

                                                                            *பாதாசன்*