நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்
நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்*
தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்
தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் !
உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்
ஒழுங்குடனே முப்பதுநாள் நோன்பி ருந்து
அல்லில்வரும் *ஷவ்வாலின்* பிறையைக் கண்ட
அப்புறமே நோன்பினையே துறப்பார் முஸ்லீம் !
அவ்வகையில் நோன்புநாள் முழுதும் பள்ளி
அனைத்தினிலும் சிற்றுண்டிச் சாலை மூடல்
செவ்வையுடன் இதுவரைகாண் வழக்க மாகும் !
சிற்றுண்டிச் சாலைகளும் மூடப் பட்ட
அவ்வளவு நாள்களிலும் இசுலாம் அல்லா
அத்தனைமா ணவர்களுமே உணவை உண்ண
எவ்வளவோ தொல்லைகளை கண்டி ருப்பார்
இதைக் *கல்வி யமைச்சர்தாய் மனமும்* காணும் !
அதனால்தான் *இவ்வாண்டு நோன்பு* நாளில்
அனைத்துமுள்ள பள்ளிச்சிற் றுண்டிச் சாலை
முதன்முதலாய்த் திறந்திருக்க வேண்டும் என்று
முடிவெடுத்த *ஃபட்லீனா சிடேக்* அம்மா,
இதற்குமுன் *நால்வருக்குக்* கல்வி தன்னை
ஈத்துவந்த *தாய்மனத்தை* மீண்டும் மற்ற
மதத்தவரும் உணவுண்ணச் செய்தே இன்று
மலேசியர்க்கும் காட்டியுள்ளார் ; அவர்க்கு நன்றி !
சிற்றுண்டிச் சாலையிலே உணவை உண்ணும்
சிலநிமிடத் திற்குள்ளே *முசுலீம் பார்க்கச்*
*சிற்றுண்டி உண்பதையே இசுலாம் அல்லார்*
திண்ணமுடன் தவிர்த்திடணும் ; *நோன்பு நோற்கும்*
*உற்றவர்க்குச் சிறுதுயரும் வாரா வண்ணம்*
மற்றமதம் சார்ந்தவர்கள் செய்தல் வேண்டும் !
கற்பவரும் கற்பித்துத் தருவோர் தாமும்
கடைப்பிடிக்க வேண்டுமிதைக் கண்டிப் பாக !
*பாதாசன்*
*அருஞ்சொல் விளக்கம் -:*
அல்லில்தான் – இரவில்தான்