தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே
தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து*
*விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்
விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி
கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் !
தற்கொலைக்கு முயற்சிசெயக் கார ணங்கள்
முற்றும்மனத் தொடர்புடைய(து) அன்றி வேறு
முதன்மையுள காரணமென் றேதும் இல்லை !
*கடன்தொல்லை , காதலிலே தோல்வி* , நல்ல
*கல்விபெற இயலாமை , ஏற்ற வேலை*
*உடன்கிடைக்க வழியின்மை , குடும்பத் தாரின்*
*உறவுகளில் பொய்த்தன்மை , பெற்ற பிள்ளை*
*கடமையெனக் கருதாமல் பெற்றோர் தம்மைக்*
*கதிகலங்கக் கைவிடுதல் , போதைப் பித்தே*
*உடமையெனும் பிள்ளைகளால் குடும்பத் துள்ளே*
*உருவாகும் சிக்கல்* – தற் கொலையின் ஊற்றாம் !
தற்கொலையின் ஊற்றுக்கண் அனைத்தும் உள்ளம்
சார்ந்தவையாய் இருக்கையிலே மனவ ளத்தைக்
கற்பித்தல் ஒன்றேதான் தற்கொ லையைக்
கட்டுக்குள் கொண்டுவர வழியாம் ; இந்த
அற்புதத்தை உணர்ந்திதனை நாட்டின் சட்ட
அமைப்பின்சீர் திருத்தம்சார் அமைச்சர் சொன்னார் !
நற்பலனை மனவளத்துப் பயிற்சி மூலம்
தற்கொலைக்கு முயல்வார்க்குத் தரவே கூடும் !
*தன்னூக்கம் , தன்முயற்சி , தன்னம் பிக்கை*
தற்கொலைக்கு முனைவோர்பின் பற்றிக் கொண்டால் ;
*மின்னூக்கம்* இஃதென்றே ஏற்றுக் கொண்டால்
வேறொன்றும் அவர்களுக்குத் தேவை இல்லை !
*என்னூக்கம் என்னிடமே உண்டாம்* வேறாய்
யாரிடத்தும் அவ்வூக்கம் இல்லை என்பார்க்(கு)
*என்னூக்கம்* தேவை ? *மன வளத்தைச்* சார்ந்த
எப்பயிற்சி யும்தேவை இல்லை , இல்லை !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
1. மின்னூக்கம் : மின்சாரம் தரும் ஊக்கம்
2. என்னூக்கம் : என்னுடைய ஊக்கம்
3. என்னூக்கம் : எந்த ஊக்கமும் தேவையில்லை