*எண்பத் தொன்பதாம்* ஆண்டுமுதல்
*இருப திருபதாம்* ஆண்டுவரை
கண்கள் முன்னே படிப்படியாய்க்
காணும் போது *சீனமொழி*
*எண்ணும் எழுத்தும்* கற்கின்ற
*இந்திய – மலாயர்* மாணவர்தம்
எண்ணிக் கையும் *இலட்சம்* வரை
எகிறி விட்டதைக் கண்டீரா !?
பணத்தைக் கொடுத்தோ, மற்றவகைப்
பரிசைத் தந்தோ நாட்டில்பிற
இனத்தைக் கவர்ந்து சீனர்களும்
இழுத்துச் சீனப் பள்ளிகளில்
தினமும் படிக்க வைக்கவில்லை ;
சீனப் பள்ளி வசதிகளும்
கணமும் சிறந்த கல்வியதும்
காரணம் பிறரை ஈர்ப்பதற்கே !
கற்பித் தலுடன் கற்றலுமே
கச்சித மாகப் பள்ளியிலே
பொற்புடன் நடக்கச் சீனர்பலர்
*புரவல ராக* உதவுகிறார் !
அற்புத மாக ஆசிரியர்
அர்ப்பணிப் புடனே மாணவர்க்கே
கற்பிக் கின்ற காரணமும்
கவர்ந்தே பிறரைக் குழப்பிடுதே !
நமது பள்ளி ஆசிரியர்
நன்றாய்ப் பயிற்று வித்தாலும்
நமது பள்ளி வளர்வதற்கு
நல்ல *புரவலர்* மிகக்குறைவே !
நமது தமிழைச் சீனரைப்போல்
நாமே *வணிக மொழியாக்க*
எமனிடம் *சாவித் திரி* போல
எவரும் *வாதிட* விலை ,அந்தோ !
வணிகர் பலர்தம் வணிகத்தில்
*வழக்கு மொழியாய்த்* தமிழைவைக்கத்
*துணிவதில்லை ; துணிந்துவிடில்*
வணிகத் தமிழும் வளர்வதுடன்
வணிக நிறுவனம் முழுவதிலும்
*வாய்க்கும் வேலை தமிழாலே !*
வணிக நிறுவனத் தாரிதனை
*மனத்தில் பதித்தால் பலன்அதிகம் !*
தமிழப் பள்ளியும் தமிழ்மொழியும்
தழைக்கத் தகுந்த *வளமுள்ள*
தமிழப் *புரவலர்* பலர்தேவை !
தமிழை *வணிக மொழியாக்கும்*
தமிழ *வணிகர்கள்* மிகத்தேவை !
தமிழ்ப்பள் ளிக்கே பிள்ளைகளை
தமிழப் *பெற்றோர்* அனுப்புவதே
தமிழ்வாழ் வுக்கே *முதல்தேவை !*
*பாதாசன்*