ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.********
இயக்குநர் ஷாஜீ சலீம் பேசுகையில், ”என்னுடைய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து எந்த தடங்கலும் இல்லாமல் படத்தின் பணியை நிறைவு செய்திருக்கிறார். அவருடன் பழகிய இந்த ஒரு வருடத்தில் தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஏறி இருக்கிறது. பணத்தை கேட்பதற்கு முன்பே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக் குழுவினர் மீதும் அவருடைய அக்கறையான அரவணைப்பு இருந்தது.
என்னுடைய தந்தையார் கே. எல். முகமது ஷெரிப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு வாசித்த கதைகளை சொல்லச் சொல்லி கேட்பார். அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.
நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடுவதற்கு முன் என் மாமியாரிடம் தான் அனுமதி கேட்டேன். ஏனெனில் எனக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, திரைத் துறையில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அந்த தருணத்தில் ‘உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் சென்று வாருங்கள். நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவர் உறுதிமொழி அளித்தார். அவர் தாயாக இருந்து குடும்பத்தை பாதுகாத்ததால் தான் என்னால் திரைத்துறையில் பணியாற்ற முடிந்தது.
இதனைத் தொடர்ந்து என்னுடைய மனைவி சஜிதா பானு. மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார். அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.
இத்திரைப்படத்தை இருபத்தி மூன்று நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள். இவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு முதல் தற்போது வரை உதவிக் கொண்டிருக்கும் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.