-ஷேக்மைதீன்-
வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் அதிகப்படியாக திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்குகின்றனர். மாநிலத்தின் மையப்பகுதி என்பதால், அது பல்வேறு வட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய தமிழர்களுக்கு உகந்ததாக அமையும்.
ஆனால் பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதால், தனிமைப்படுத்தப்படும் நாட்கள் மட்டுமல்லாமல், கூடுதல் நாட்கள் திருச்சியிலேயே தங்கியிருக்கும் நிலை
ஏற்படுகிறது. அதுவும் தனியார் விமானங்களில் வரும் பயணிகள் தனிமைப்படுத்தும் செலவினங்களையும் தாங்களே செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளதால், பரிசோதனை முடிவு வர தாமதமாகி கூடுதல் நாட்கள் தங்கும் நிலை ஏற்படும்போது, அது கடும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்களைத் தள்ளுகிறது.
ஏற்கனவே, வேலை இழந்தும், நோயாளிகளாகவும், கர்ப்பிணி பெண்களாகவும் கடும் நெருக்கடியில் வரும் தமிழர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் போக, மேலும் தாமதமாவது கூடுதல் நெருக்கடியை உருவாக்குகிறது. எனவே, கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்கி பரிசோதனைகளை விரைவு படுத்தி
முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.