விஜய் சேதுபதி நடித்த படம் மகாராஜா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் விஜய் சேதுபதி போசும்போது, “இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பதாகை கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பதாகை ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.**********
இயக்குநர் நித்திலன், “என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள். ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.