பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் TG விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப் பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.******
கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாக்கவுள்ளார். இது அவரது முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டிராத ஆக்ஷன் அவதாரத்தில் ஹீரோ சன்னி தியோலை இப்படத்தில் காட்சிப்படுத்தவுள்ளார். தென்னிந்திய இயக்குநருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மீது, வடநாட்டுப் பார்வையாளர்கள் சிறப்பு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுதே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.