சென்னை “குரோம்பேட்டை நாடக கலை மன்றம்”. சார்பில் நந்தனார் மேடை நாடகம் நடந்தது. நந்தனார் நாடகத்தை மூத்த நாடக நடிகையும் கதாசிரியரும இயக்குநருமான கீதா நாராயணன் எழுதி இயக்கியிருந்தார். இவர் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நாடக்குழுவில் பணியாற்றியவர். இந்நாடகத்தில் அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்தவர்கள் சின்னஞ் சிறுவர்கள்தான். இந்நாடத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பை சின்னஞ் சிறுவர்கள் மனதில் விதைத்திருக்கும் இயக்குநர் கீதா நாராயணனை பாராட்ட வேண்டும். ஒரு கிராமத்தில் 40 வேலி விவசாய நிலத்திற்கு சொந்தக்காரராக, வேதங்களை கற்றவரும் பூஜை புணஸ்காரங்கள் ஆராதானைகள் செய்யும் பண்டிதரான அய்யர் ஒருவர் இருக்கிறார். அதே கிராமத்தில் சேரியில் வாழ்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். அந்த
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நந்தனும் தனது தாயாருடன் வசித்து வருகிறார். அய்யரின் 40 வேலி நிலத்தையும் நந்தனின் தலைமையில் சேரி மக்கள் உழுது பயிரிட்டு அய்யருக்கு அடிமையாக தீண்டத்தகாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். நந்தன் மிகச் சிறந்த சிவபக்தன். எந்நேரமும் சிவபெருமானின் பெயரையே முனுமுனுத்துக் கொண்டிருப்பார். அய்யரிடம் ஏதேனும் கோரிக்கை கேட்க வேண்டுமென்றால் அய்யரின் கொல்லைபுர வாசல். வழியாக கூனிக் குறுகி வாயில் கைவைத்துக் கொண்டு “ஆண்டே ஆண்டே” என்று கூப்பிடுவார். அய்யர் வெளியே வந்ததும் அவர்மீது தன் நிழல் படாதவாறு பின்னோக்கி நடந்துவந்து தனது கோரிக்கையை அடக்க ஒடுக்கத்துடன் சொல்வார். காலங்காலமாக இந்த அடிமைத்தனம் அவர்களின் ரத்ததில் ஊறிப்போய் கிடக்கிறது. ஒருமுறை நந்தன் தனது உறவினர்களுடன் திருப்பங்கூரிலுள்ள சிவபெருமானை தரிசிக்க செல்கிறார்கள்.
கீழ் சாதிக்காரர்களான இவர்கள் கோயிலுக்குள் செல்லாமல் வெளியே நிற்கிறார்கள். சிவலிங்கத்திற்கு நேர் எதிராக கல் நந்தி படுத்திருக்கிறது. சிவலிங்கத்தை காணமுடியவில்லை. நந்தன் மனமுறுகி கண்கலங்குகிறார். உடனே கல் நந்தி விலகி சிவலிங்கத்தை தரிசிக்க வழிவிடுகிறது. எல்லோரும் சிவபெருமனை தரிசித்துவிட்டு ஊர் திரும்புகிறார்கள். கல் நந்தி விலகி சிவ தரிசனத்திற்கு வழிவிட்ட செய்தியை அய்யர் அறிந்த பிறகும் அவர் மனமாறவில்லை. தன்னிடம் சொல்லாமல் திருப்பங்கூர் சென்ற நந்தனை பிரம்பால் அடித்து விரட்டுகிறார். சிலநாட்கள் கழித்து சிதம்பரம் சென்று தில்லை நாதன் சிவபெருமானை தரிசிக்க ஆர்வம் கொள்கிறார் நந்தன். சிதம்பரம் சென்றுவர அய்யரிடம் அனுமதி கேட்கிறார் நந்தன். அதற்கு அய்யர் “தனது 40 வேலி நிலத்தையும் உழுது பயிரிட்டு அறுவடை செய்துவிட்டு போடா” என்கிறார். இதைக் கேட்டதும் நந்தன் மயக்கம்ற்று கீழே விழுந்து விடுகிறார். ஆனால் அன்றிரவு தரிசாக கிடந்த 40 வேலி நிலத்திலும் சிவபெருமான் நெற்கதிர்களை விளைவித்து விடுகிறார். அதிகாலையில் தனது 40 வேலி நிலத்திலும் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தலைசாய்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் அய்யர். கண்கலங்கியபடி நந்தனின் காலில் அய்யர் சாஸ்ட்ராகிரமமாக விழுந்து வணங்க்கிறார். அங்கு அய்யர் விழவில்லை ஆணவம்
வீழ்ந்ததாக எண்ணி பார்வையாளர்களின் கைத்தட்டல் பலமாக ஒலித்தது. இத்தோடு நாடகம் முடியவில்லை. நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியாக சிவபெருமான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தர்மகர்த்தா முக்கிய காரியஸ்தரின் கனவில் தோன்றி, “எனது பரம பக்த்தன் நந்தன் “அங்கே வரலாமோ” என்று கேட்டு கோயிலுக்கு வெளியே நிற்கிறான். அவனை இப்போதே தக்க மரியாதையுடன் எனது ஆலயத்துக்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு மறைகிறார். உடனடியாக
அவர்கள் இருவரும் கையில் நிறைகுட கும்பம் ஏந்தி மேளதாளத்துடன் நந்தன் நிற்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கேதான் சாஸ்த்திரம் தலைவிரித்து கூத்தாடுகிறது. இறைவன்
சொல்லிவிட்டான் என்பதற்காக கீழ்சாதிக்காரனை ஆலயத்துக்குள் அழைத்து சென்றால் நமது சாஸ்திரம் சம்ரதாயங்கள் என்னாவது. நமக்கு நரகம் அல்லவா சம்பவிக்கும்’ என்று ஒருவர் சொல்கிறார். அதற்கு மற்றவர் நந்தனை அக்னிக்குண்டத்தில் இறங்கச் சொல்வோம் உயிருடன் வந்தால் ஆலையத்துக்குள் அழைத்துச் செல்வோம் என்கிறார். இந்த ஒப்பந்தத்திற்கு நந்தனும் சம்மதிக்கிறார். தீயை மூட்டி அக்னிக்குண்டத்தை வளர்க்கிறார்கள். நந்தன் தீக்குழிக்குள் இறங்கி நந்தனாராக வெளியே வருகிறார். இறைவனே நந்தனை ஆலயத்துக்கு அழைத்துவரச் சொல்லியும் அதை அப்படியே நிறைவேற்றாமல் நந்தனை தீக்குளிக்க செய்தது எது? அது தெரியும், ஆனால் தெரியாது. மனுநீதி சாஸ்த்திரத்தின் சூட்சம கட்டுகளை அவிழ்க்க முயற்சிக்கிறார் கதாசிரியை கீதா நாராயணன். பாராட்டுக்கள் தோழி. தொடரட்டும் உங்கள் பணி. ஆண்டவன் முன் அனைவரும் சமமே.
தங்க நகையை அலங்கரிப்பதைப் போல் நாடகத்தை அழகாக அமைத்திருக்கிறார் இயக்குநர் கீதா நாராயணன். நந்தனாக நடித்த திவேஷ் ஒவ்வொரு கட்டத்திலும் கைத்தட்டலை பெறுகிறார். அய்யராக நடித்த ஆகாஷ் அகந்தை தனத்தை முகத்தில் காட்டுவது அருமை. அவருக்கு மனைவியாக நடித்த ஆதிரா உடலை சிலிப்பி கொண்டு உதடை இழுத்துக் கொண்டு செல்வது அனைவரயும் சிரிக்க வைக்கிறது. அய்யருக்கு கணக்கராக வரும் ரிஷிகுமார் கோல்மூட்டி செய்யும் அட்டகாசத்தை அப்படியே மேடையில் காட்டுகிறார். இந்நாடகத்தில் நடித்த 19 பேரும் சிறுவர்கள். ஆனால் நடிப்பில் முதிர்ந்தவர்கள்.
-சிவசண்முகப்பிரியன்-