ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் ‘லவ் இங்க்’ என்ற சொல் மிகவும் பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது காதல் சின்னத்தையோ ஜோடிகள் பச்சை போட்டுக் கொள்கிறார்கள். இதனால், ஜோடிகளுக்கு இடையில் காதல் கூடுகிறது என்று நம்பப்படுகிறது. இப்படியான காதலர்களைச் சுற்றிதான் ‘லவ் இங்க்’ படம் நகர்கிறது. இதோடு படத்தில் ஃபன், ஆக்‌ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் தொடங்கியது.*******

நடிகர் அஜித்குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா தனது இயல்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் மட்டுமல்லாது ஓடிடி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘உப்பு புளி காரம்’ ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. ‘லவ் இங்க்’ படத்தில் நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்து மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார். இந்த ரோம்-காம் ஆக்‌ஷன் படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு  முன்பு, சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து சில அரசியல் பாடல்களை இயக்குவதில் தனது திறமையை நிரூபித்தார்.

இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதிகேசவன் சாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த பிறகு மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான நடிப்பு மற்றும் அதே நேரத்தில், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட ஒரு நடிகரைத் தேடினேன். ’வலிமை’ படத்தில் ராஜ் அய்யப்பாவின் நடிப்பைப் பார்த்தபோது, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று உணர்ந்தேன். டெல்னா டேவிஸ் தனது திறமையான நடிப்பு மற்றும் அழகால் பல ரசிகர்களைப் பெற்றவர். யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், டி.எஸ்.ஜி (’மார்க் ஆண்டனி’ வில்லன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்), மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர். அர்ஜூனா A.S (ஒளிப்பதிவு), விஷ்ணு விஜய் (இசை), ராமு தங்கராஜ் (கலை இயக்குநர்), B. கிருஷ்ணா சுதர்சன் (எடிட்டர்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. முழுப் படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களாகப் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு குறுகிய காலத்திற்குள் முடிக்கப்படும்.