தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலம் 2 அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் வட்டம் மூவேந்தர் தெரு, நாகல்கேணி பகுதியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்றதிட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் உள்ள தங்கும் இடம், சமையலறை, வைப்பறை போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் மாணவியர்களுக்கு தேவையான இரவு உணவினை சமையல் செய்பவர்கள் ஊத்தப்பம்–சட்னி சமைப்பதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக சமையலறையில் பார்வையிட்டு, அதனை உண்டு பார்த்து உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். சமையலறையில் உள்ள இருப்புப் பொருட்களை நேரடியாக பார்வையிட்டு பொருட்கள் எங்கு கொள்முதல் செய்யப்படுகிறது என கேட்டறிந்து உறுதி செய்தார். வாரத்தில் 7 நாட்களும் என்னென்ன உணவுப் பொருட்கள் மனவிரிகளுக்கு வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார்.
மேலும் விடுதியில் பயிலும் மாணவிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள், கதை புத்தகங்கள் போன்று ஏதேனும் தேவைப்படுகிறதா என கேட்டறிந்து, தேவைப்படின் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.
மாணவர்களிடம் இறுதியாக நடைபெற்ற தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் என கேட்டறிந்து,நன்றாக கல்வி பயிலுமாறு அறிவுறுத்தினார். தினமும் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மாணவிகளுக்கான பொருட்களை வைப்பதற்காக இடம் போதவில்லை எனில் பெட்டகங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் விடுதிக்குள் கொசுக்கள் வராமல் தடுக்க சுற்றிலும் கொசு வலை அமைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.வெற்றிக்குமார், தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர் திரு.பாலு, தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2 தலைவர் திரு.ஜோசப் அண்ணாதுரை, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிராஜ் பாபு, பல்லாவரம் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.